ARTICLE AD BOX
ஐதராபாத்: 350 துணை நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்ததால் அவர்கள் போலீசில் புகார் அளித்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண், கியரா அத்வானி நடிப்பில் உருவான ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், இப்படத்தில் நடித்த துணை நடிகர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என 350 துணை நடிகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘கேம் சேஞ்சர்’ படத்திற்காக படமாக்கப்பட்ட ஒரு பாடல் காட்சிக்காக 350 துணை நடிகர்களை இணை இயக்குனர் ஒருவர் ஏற்பாடு செய்ததாகவும், படப்பிடிப்பு முடிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ₹1200 சம்பளம் தரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்த பின்னர் சம்பளம் வழங்கப்படாததால், பலமுறை கேட்டும் எந்த பதிலும் இல்லை. இதனால், அவர்கள் அனைவரும் குண்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தங்களை ஒப்பந்தம் செய்த இணை இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். அவரது தரப்பு இதற்கு பதில் அளிக்காமல் அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.