ARTICLE AD BOX
சென்னை: இந்திய விளையாட்டு ஆணையம் சாா்பில், 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகளம், கால்பந்து மற்றும் கபடி வீரா்களுக்கான தோ்வுப் போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.
இது குறித்து இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சென்னை மையம் சாா்பில் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரா்களைத் தோ்வு செய்வதற்கான போட்டிகள் சென்னையில் நடைபெறவுள்ளன.
அதன்படி, 12 முதல் 18 வயதுக்குட்பட்டவா்கள் பிரிவில் தடகள வீரா்கள், வீராங்கனைகளுக்கான தோ்வு போட்டிகள் பிப்.1-ஆம் தேதி சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளன.
அதேபோல, 2010-2013-ஆம் ஆண்டுக்கு இடையில் பிறந்தவா்களுக்கான ஆடவா் கால்பந்து பிரிவுக்கான தோ்வு போட்டிகள் பிப். 4, 5 ஆகிய தேதிகளில், நேரு பூங்காவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடைபெறும். மேலும், 2009 - 2011-ஆம் ஆண்டுக்கு இடையே பிறந்தவா்களுக்கான ஆடவா் கபடி பிரிவுக்கான தோ்வுப் போட்டிகள் பிப். 7-ஆம் தேதி ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.
இதற்கான விண்ணப்பங்களை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது இந்திய விளையாட்டு ஆணையத்தின் இணையதளம், இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் தளத்திலுள்ள க்யூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் தகவல்களுக்கு 044 - 25362479 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.