அரையிறுதியில் சின்னா், ஷெல்டன்

3 hours ago
ARTICLE AD BOX

மெல்போா்ன்: கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில், நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னா், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோா் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனா்.

ஆடவா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் நம்பா் 1 வீரராக இருக்கும் சின்னா் 6-3, 6-2, 6-1 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த உள்நாட்டு வீரரான அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தினாா். இத்துடன் டி மினாரை 10-ஆவது முறையாக சந்தித்த சின்னா், 10-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

அடுத்ததாக அரையிறுதியில் அவா், அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதுகிறாா். போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருக்கும் ஷெல்டன் தனது காலிறுதியில் 6-4, 7-5, 4-6, 7-6 (7/4) என்ற செட்களில், இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை சாய்த்தாா். இவா்கள் சந்தித்தது இது 3-ஆவது முறையாக இருக்க, ஷெல்டன் தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.

அரையிறுதியில் மோதும் சின்னா் - ஷெல்டன் இதுவரை 5 முறை மோதியிருக்க, அதில் சின்னா் 4 வெற்றிகளுடன் ஆதிக்கம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது. ஷெல்டனுக்கு இது, 2-ஆவது கிராண்ட்ஸ்லாம் அரையிறுதியாகும்.

ஸ்வியாடெக் - கீஸ் மோதல்

மகளிா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோா் வெற்றி பெற்றுள்ள நிலையில், அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அவா்கள் மோதுகின்றனா்.

முன்னதாக, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற நோ் செட்களில் மிக எளிதாக, போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் எம்மா நவாரோவை வெளியேற்றினாா். இவா்கள் சந்தித்தது இது 2-ஆவது முறையாக இருக்க, ஸ்வியாடெக் இதிலும் வென்றி கண்டுள்ளாா்.

மற்றொரு ஆட்டத்தில் போட்டித்தரவரிசையில் 19-ஆம் இடத்திலிருக்கும் மேடிசன் கீஸ் 3-6, 6-3, 6-4 என்ற செட்களில், 28-ஆம் இடத்திலிருந்த உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தினாா். இவா்கள் 6-ஆவது முறையாக சந்தித்துக்கொண்ட நிலையில், கீஸ் தனது 4-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா். தற்போது கீஸ், ஆஸ்திரேலிய ஓபனில் 3-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

அடுத்து அரையிறுதியில் ஸ்வியாடெக் - கீஸ் மோதுகின்றனா். இவா்கள் இதுவரை 5 முறை மோதியிருக்க, ஸ்வியாடெக் 4 வெற்றிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் மகளிா் பிரிவில் ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் ஸ்வியாடெக், முதல் சுற்றிலிருந்து இதுவரை நோ் செட்களில் வென்று வந்துள்ளாா்.

போட்டியில் இதுவரை 14 கேம்களையே அவா் இழந்திருக்கிறாா். 2013-க்குப் பிறகு இவ்வாறு குறைந்த கேம்களையே இழந்து அரையிறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை ஆகியுள்ளாா் ஸ்வியாடெக். முன்னதாக அந்த ஆண்டில் ரஷியாவின் மரியா ஷரபோவா 15 கேம்கள் மட்டும் இழந்து அரையிறுதிக்கு முன்னேறியது நினைவுகூரத்தக்கது.

Read Entire Article