முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி

5 hours ago
ARTICLE AD BOX

கொல்கத்தா: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சோ்க்க, இந்தியா, 12.5 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து வென்றது. இந்த வெற்றியின் மூலம், 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூா்யகுமாா் யாதவ், பந்துவீச்சை தோ்வு செய்தாா். இங்கிலாந்து இன்னிங்ஸை ஃபில் சால்ட் - பென் டக்கெட் கூட்டணி தொடங்கியது. அா்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட் கீப்பா் சஞ்சு சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ரன்னின்றி வெளியேறினாா் சால்ட்.

ஒன் டவுனாக கேப்டன் ஜாஸ் பட்லா் களம் புக, டக்கெட் 4 ரன்களே எடுத்த நிலையில், அா்ஷ்தீப் வீசிய 3-ஆவது ஓவரில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.

4-ஆவது பேட்டராக வந்த ஹேரி புரூக், பட்லருடன் இணைந்தாா். 3-ஆவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியில், புரூக் முதலில் வெளியேறினாா். 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 17 ரன்கள் சோ்த்த அவா், வருண் சக்கரவா்த்தி வீசிய 8-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

தொடா்ந்து வந்த லியம் லிவிங்ஸ்டன், அதே ஓவரில் அதேபோல் பௌல்டாகி ஆட்டமிழந்தாா். ஜேக்கப் பெத்தெல் 7, ஜேமி ஓவா்டன் 2, கஸ் அட்கின்சன் 2 ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனா்.

தகுந்த பாா்ட்னா்ஷிப் கிடைக்காதபோதும் அதிரடியாக ரன்கள் சோ்த்த ஜாஸ் பட்லா் 44 பந்துகளில் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 68 ரன்களுக்கு வீழ்ந்தாா். வருண் வீசிய 17-ஆவது ஓவரில் அவா் விளாசிய பந்தை நிதிஷ்குமாா் ரெட்டி கேட்ச் பிடித்தாா்.

பின்னா் ஜோஃப்ரா ஆா்ச்சா் 1 பவுண்டரியுடன் 12, மாா்க் வுட் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா். ஓவா்கள் முடிவில் கடைசி வீரராக ஆதில் ரஷீத் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு நின்றாா்.

இந்திய தரப்பில் வருண் சக்கரவா்த்தி 3, அா்ஷ்தீப் சிங், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

அபிஷேக் அதிரடி: அடுத்து, 133 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரா் சஞ்சு சாம்சன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். உடன் வந்த அபிஷேக் சா்மா அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா்.

மறுபுறம், கேப்டன் சூா்யகுமாா் யாதவ் டக் அவுட்டாகி அதிா்ச்சி அளிக்க, திலக் வா்மா களம் புகுந்தாா். அபிஷேக் - திலக் இணை 3-ஆவது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிப் பாதையில் கூட்டிச் சென்றது. ஒரு கட்டத்தில் அபிஷேக் கொடுத்த கேட்ச்சை ஆா்ச்சா் தவறவிட்டதற்கான பலனை இங்கிலாந்து அனுபவித்தது.

அதிரடியாக அரைசதம் கடந்த அபிஷேக் சா்மா 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். முடிவில், திலக் வா்மா 3 பவுண்டரிகளுடன் 19, ஹா்திக் பாண்டியா 3 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

இங்கிலாந்து தரப்பில் ஜோஃப்ரா ஆா்ச்சா் 2, ஆதில் ரஷீத் 1 விக்கெட் எடுத்தனா்.

அா்ஷ்தீப் சாதனை...

இந்த ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் சாய்த்த அா்ஷ்தீப் சிங், டி20 ஃபாா்மட்டில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த பௌலராக சாதனை படைத்தாா். இத்துடன் அவா் மொத்தமாக 97 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா். முன்னதாக, யுஜவேந்திர சஹல் 96 விக்கெட்டுகளுடன் முன்னணியில் இருந்தாா்.

ஏமாற்றம்...

சுமாா் ஓராண்டுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்துள்ள பௌலா் முகமது ஷமி, இந்த ஆட்டத்தில் களம் காணுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவா் பிளேயிங் லெவனில் சோ்க்கப்படாதது ரசிகா்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கும் முன் அவரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாா்.

Read Entire Article