ARTICLE AD BOX
வரவுக்குள்ளதான் செலவு இருக்கணும். இது இந்தியர்களோட பாரம்பரிய பழக்கம். ஆனால், இப்போதெல்லாம் கடன் வாங்கியாவது செலவு செய்யறததான் ஃபேஷன் என நினைக்கிறார்கள். இதைத்தான் வெளிக்காட்டுகிறது தனியார் நிறுவனங்களின் ஆய்வுகள்.
சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை இ.எம்.ஐ. செலுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நிதி தொழில்நுட்ப சேவைகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்தும் 30 லட்சம் பேரிடம் பி.டபிள்யு.சி., மற்றும் பெர்பியோஸ் நிறுவனங்கள் இணைந்து ஆய்வு செய்துள்ளன. இதில், இந்தியர்கள் தங்களது சம்பளத்தில் 39 சதவீதத்தை , கடனைத் திரும்பச் செலுத்தவும், காப்பீட்டுக்கான பிரீமியத்தைச் செலுத்தவும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
குறைந்த வருமானம் பெறுபவர்கள் வங்கி போன்ற முறையான வழிகளைக் காட்டிலும் நண்பர்கள், உறவினர்கள், வட்டி அல்லது அடகு கடைகளில் கடன் வாங்குவது தெரியவந்திருக்கிறது. ஆரம்ப நிலை பணியாளர்கள் தங்கள் சம்பளத்தில் 35 சதவீதத்தையும், நீண்டகால பணியாளர்கள் 40 சதவீதத்தையும், நடுத்தர வருமானம் உடையவர்கள் 44 சதவீதத் தொகையையும், அதிக வருமானம் பெறுபவர்கள் 46 சதவீதத் தொகையையும் மாதாந்திர தவணையாக செலுத்துவது தனியார் நிறுவனங்களின் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
கட்டாய செலவுகளுக்கு 39 சதவிகிதத் தொகையையும், தேவையான செலவுகளுக்கு 32 சதவிகிதத்தையும் விருப்ப செலவுகளுக்கு 29 சதவிகிதத் தொகையையும் இந்தியர்கள் செலவு செய்வதாக அந்நிறுவனங்களின் ஆய்வுகள் கூறுகின்றன.
கடனை திருப்பிச் செலுத்துவது, காப்பீட்டுக்கான பிரீமியத்தை செலுத்துவதும் கட்டாய செலவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. விருப்பச் செலவில் பெரும்பாலான தொகை, அதாவது ஆடை அலங்கார பொருட்களுக்கு 63 சதவிகிதம் செலவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் கேமிங்கிற்கு 14 சதவிகிதமும், உணவு ஆர்டர் செய்வதற்கு 13 சதவிகிதமும், பொழுதுபோக்கிற்கு 3 சதவிகிதமும், மது அருந்த 3 சதவிகிதமும், பயணம் மேற்கொள்ள ஒரு சதவிகிதமும், பிற செலவுகளுக்காக 3 சதவிகிதமும் செலவு செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தேவையான செலவுகளுக்காக ஒதுக்கப்படும் தொகையில் குடிநீர் மற்றும் மின்சாரத்திற்கு 30 சதவிகிதத் தொகை செலவிடப்படுவது தெரியவந்துள்ளது.
அன்றாட தேவைகளுக்கு 18 சதவிகிதமும், வீட்டு வாடகைக்கு 16 சதவிகிதமும், மருந்துகளுக்கு 15 சதவிகிதமும், எரிபொருளுக்கு 10 சதவிகிதமும், பிற செலவினங்களுக்கு 12 சதவிகிதமும் இந்தியர்கள் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.