ராபர்: விமர்சனம்

22 hours ago
ARTICLE AD BOX

கிராமத்தில் வசிக்கும் தனது தாய் தீபா சங்கரின் பேச்சை மீறி சென்னைக்கு வரும் ‘மெட்ரோ’ சத்யா, ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெண்களை கவர்வதற்காகவும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார். ஆபீசில் இருந்து சில மணி நேரம் வெளியே வந்து, முகமூடி அணிந்து நகை திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார். கொள்ளையடித்த நகைகளையும், பணத்தையும் வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் அவர், நகைகளை ஒருவரிடம் விற்கிறார். திடீரென்று அந்த நபர் இறந்ததால், டேனியல் போப்பிடம் நகைகளை விற்க தொடங்குகிறார்.

யாருக்கும் ‘மெட்ரோ’ சத்யாவின் முகம் தெரியாது. அப்போது அவருக்கும், டேனியல் போப்பிற்கும் மோதல் ஏற்படுகிறது. நகை பறிக்கும்போது ஒரு பெண் பலியாகிறார். அவரது தந்தை ஜெயப்பிரகாஷும், டேனியல் போப்பும் ‘மெட்ரோ’ சத்யாவை தேட, பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. கேரக்டருக்கு ஏற்ப நன்கு உழைத்துள்ள ‘மெட்ரோ’ சத்யா, எவ்வளவு சித்திரவதை செய்தாலும் உண்மையை சொல்லாமல் சண்டித்தனம் செய்வது மிரட்டல். கிளைமாக்சில் அவரது நடிப்பு வேற லெவல். தாயாக வரும் தீபா சங்கர், இறுதியில் உருக வைக்கிறார். வில்லத்தனத்தில் டேனியல் போப் வித்தியாசம் காட்டுகிறார்.

ஜெயப்பிரகாஷ், ‘ராஜா ராணி’ பாண்டியனுக்கு இது மறக்க முடியாத படம். சென்ராயன், நிஷாந்த் உள்பட அனைவரும் அந்தந்த கேரக்டருக்கு வலு சேர்த்துள்ளனர். ஆடம்பர வாழ்க்கைக்காக இன்றைய தலைமுறையினர் என்னென்ன செய்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டிய இயக்குனர் எஸ்.எம்.பாண்டி, நகை திருட்டை விரிவாக காட்டி பயமுறுத்தியுள்ளார். ஜோஹன் செவனேஷ் பின்னணி இசை விறுவிறுப்பை அதிகரித்து, படத்தை வேறொரு தளத்துக்கு தூக்கி நிறுத்துகிறது. என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது. இது விழிப்புணர்வு ஏற்படுத்தும் கதை என்பதால், லாஜிக் மீறல்களை விட்டுவிடலாம். வழிப்பறி கொள்ளை ஆசாமிகள் தானாக திருந்தினாலொழிய இதுபோன்ற குற்றங்கள் குறையாது என்ற உண்மை சுடுகிறது.

Read Entire Article