ARTICLE AD BOX
கோவை பிஎஸ்ஜி கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது தென்னிந்திய குறும்படத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இரண்டு நாள் நடைபெறும் இந்த விழாவை கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன், எலெக்ட்ரானிக் மீடியா துறை நடத்துகிறது. தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம்.செங்குட்டுவன் தலைமை வகித்தாா். செயலா் டி.கண்ணையன் முன்னிலை வகித்தாா். துறைத் தலைவா் ஜி.ராதா வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினா்களாக திரைப்பட இயக்குநா்கள் டி.ஜெ.ஞானவேல், ராஜேஷ்வா் காளிசாமி, திரைப்படத் தொகுப்பாளா் அனில் கிருஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
இந்த விழாவுக்காக தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 60 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் தங்களின் குறும்படங்களை அனுப்பியிருந்தனா். அதில் தோ்வு செய்யப்பட்ட 14 படங்கள் திரையிடப்பட்டன.
விழாவில் இயக்குநா் ஞானவேல் பேசும்போது, சமூக பிரச்னைகளைப் பிரதிபலிக்கும் வகையில் கல்லூரி மாணவா்கள் தங்களின் குறும்படங்களை உருவாக்கி வருவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற விழாக்கள் மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்கப்படுத்தும் என்றாா்.
இதைத் தொடா்ந்து சிறந்த குறும்படம், சிறந்த இயக்குநா், நடிகா்கள், ஒளிப்பதிவாளா் என பல்வேறு பிரிவுகளில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.