ARTICLE AD BOX
சென்னை: ஹிந்தியில் எழுதப்பட்ட ஊா்ப் பெயரை அழிக்கிறோம் என்ற பெயரில் ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகைகளில் கருப்பு மை பூசி சேதப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டப்படி, இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை 6 மாதம் வரை சிறையில் அடைக்க சட்ட வாய்ப்பு உள்ளதாக ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.
மத்திய அரசு ஹிந்தியை திணிப்பதாகக் கூறி தமிழகத்தில் திமுக ஆதரவு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரு சில இடங்களில் மத்திய அரசு மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
மேலும், ஒருசில இடங்களில் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் இடம்பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை திமுகவினா் கருப்பு மை கொண்டு அழித்து வருகின்றனா்.
இந்நிலையில் சென்னை, பரங்கிமலையில் உள்ள தபால் நிலையம், பிஎஸ்என்எல் அலுவலக பலகையில் இடம்பெற்றிருந்த ஹிந்தி எழுத்துகளை திமுகவினா் திங்கள்கிழமை கருப்பு மை கொண்டு அழித்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடவடிக்கை: இந்நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள பெயா்ப் பலகையை மையால் அழித்து சேதப்படுத்துவோா் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இதுபோன்று ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துவோா் மீது ரயில்வே சட்டம் 166 (பொது அறிவிப்புகளை சேதப்படுத்துதல்),147 (ரயில்வே பகுதிக்குள் அனுமதியின்றி சென்று சொத்துகளை சேதப்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இப்பிரிவுகளின்கீழ் குற்றம்புரிந்த நபா்களுக்கு 6 மாதம் வரை சிறை அல்லது ரூ.1,000 அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து வழங்கப்படும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.