மொறுமொறு சிப்ஸ்.. ஆசையா தொட்டால் இந்திய பொருளாதாரத்துக்கே ஆபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

3 hours ago
ARTICLE AD BOX

மொறுமொறு சிப்ஸ்.. ஆசையா தொட்டால் இந்திய பொருளாதாரத்துக்கே ஆபத்து! எச்சரிக்கும் நிபுணர்கள்

Chennai
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் மக்களிடையே, உடல் பருமன் அதிகரித்து வருவது ஒரு பெரிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தப்போகிறதாம். உடல் பருமன் உடல்நிலையைத்தானே பாதிக்கும். பொருளாதாரத்தை எப்படி பாதிக்கும் என சந்தேகப்படுகிறீர்களா. அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத்தான்.

2019 ஆம் ஆண்டில், உடல் பருமன் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் $28.95 பில்லியன் வரை பாதிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா. நம்பாவிட்டாலும் இதுதான் நிஜம். இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1% ஆகும். இதெல்லாம் சாதாரண மேட்டரே இல்லை. தற்போதைய போக்கு தொடர்ந்தால், இந்த எண்ணிக்கை 2060 ஆம் ஆண்டில் $838.6 பில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது GDP இல் 2.5% ஆக இருக்கும்.

health economy Obesity

பொருளாதார ஆய்வறிக்கையின் எச்சரிக்கை

சமீபத்திய பொருளாதார ஆய்வறிக்கை 2024-25, இந்த பிரச்சினைக்கு உடனடி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உடல் பருமனை கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் அது பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் துரித உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

முந்தைய பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 இல், இந்தியர்கள் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் நாட்டின் "ஜனத்தொகை " அறுவடை செய்ய முடியாது என்று எச்சரித்தது. அதாவது, இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவால், ஆரோக்கியமற்ற மக்கள் தொகை இருந்தால் பொருளாதார பலன்களைப் பெற முடியாது.

உணவுப் பழக்கங்களும் உடல் உழைப்பும்

இந்தியாவில் உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று உடல் உழைப்பு குறைந்து வருவது. அத்துடன், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் ஒரு முக்கிய காரணம். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) அறிக்கையின்படி, இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவு விற்பனை 2011 முதல் 2021 வரை ஆண்டுக்கு 13.37% அதிகரித்துள்ளது.

கிராமப்புற மக்கள் தங்கள் உணவு செலவில் 9.6% பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்காகவும், நகர்ப்புற மக்கள் 10.64% செலவிடுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உணவுகளில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு இருப்பதால் உடல் பருமன் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தேசிய திட்டம் தேவை

உடல் பருமன் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவில் இன்னும் ஒரு விரிவான தேசிய திட்டம் இல்லை. குழந்தைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கான ஊட்டச்சத்து திட்டங்கள் இருந்தாலும், அனைத்து வயதினருக்கும் உடல் பருமனைத் தடுக்கும் ஒரு முழுமையான அணுகுமுறை தேவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் ஓய்வு பெற்ற விஞ்ஞானி அவுலா லட்சுமய்யா, எகனாமிக்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறுகையில், உடல் பருமனின் பொருளாதார தாக்கம் மருத்துவ சிகிச்சை செலவுகளை மட்டும் ஏற்படுத்தாது. "வேலை இழப்பு, வாய்ப்பு செலவுகள் மற்றும் சமூக ஆதரவு இல்லாவிட்டால் ஏற்படும் மன உளைச்சல் ஆகியவை இந்த பொருளாதார சுமைக்கு முக்கிய காரணங்கள்" என்று அவர் தெரிவித்தார்.

என்ன செய்ய வேண்டும்?

உடல் பருமன் என்பது தனிப்பட்ட ஆரோக்கியம் மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சார்ந்தது என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா தனது இளைஞர்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமானால், ஆரோக்கியமான மற்றும் உற்பத்தி திறன் கொண்ட பணியாளர்கள் அவசியம். உடல் பருமனை இப்போது கட்டுப்படுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதார வாய்ப்பை இழக்க நேரிடும் என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. எனவே, அடுத்த முறை நீங்கள் சிப்ஸ் பாக்கெட்டை கையில் எடுக்கும்போது அல்லது உடற்பயிற்சியை தவிர்க்க நினைக்கும்போது, ​​அது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

More From
Prev
Next
English summary
India faces a growing obesity crisis that is not just a health issue but a significant threat to its economy. Economic surveys warn that rising obesity rates could slash India's GDP, potentially costing the nation billions by 2060. This article explores how increasing obesity, driven by sedentary lifestyles and ultra-processed food consumption, is impacting India's economic potential and highlights the urgent need for a national obesity strategy and stricter food regulations.
Read Entire Article