ARTICLE AD BOX
இந்தியப் பெருங்கடல் பகுதியில் மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தைத் தேடும் பணிகள் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆன்டனி லோக் கூறியதாவது:
கடலுக்குள் மாயாமாகியுள்ள மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணியை ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தொடங்கியுள்ளது. இது தொடா்பாக அந்த நிறுவனத்துக்கும் மலேசிய அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் இறுதிவடிவை எட்டவில்லை. இருந்தாலும், அதற்குள் தங்களது தேடுதல் கப்பல்களைக் கொண்டுவந்து அந்த நிறுவனம் பணியைத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம்.
இந்தத் தேடுதல் வேட்டை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை என்றாா் அவா்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 8-ஆம் தேதி 239 பயணிகளுடன், கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு எம்ஹெச்370 விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்திய பெருங்கடல் பகுதியை கடக்கும்போது அந்த விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாகவும், அதிலிருந்த அனைவரும் உயிரிழந்ததாகவும் பின்னா் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த விமான பாகங்களைத் தேடும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்றன. ஆனால், எந்த விதத்திலும் விமான பாகங்கள் கண்டறியப்படாத நிலையில் கடந்த 2017 ஜனவரியில் தேடுதல் பணி கைவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் கடந்த 2018-ஆம் ஆண்டு தேடுதல் பணியை தொடங்கியது. ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த முயற்சியும் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், புதிய தரவுகள் மற்றும் முன்பைவிட அதிநவீன தேடுதல் கப்பல்களின் உதவியுடன் எம்ஹெச்370 விமானத்தை தேடித் தர ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் தற்போது முன்வந்துள்ளது.