ARTICLE AD BOX
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ பசவராஜு ஷிவகங்கா, வரும் டிசம்பருக்குள் டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவார் எனவும், இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் எனவும் கூறியுள்ளார். அதேபோல், டி.கே.சிவகுமாருடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, டி.கே.சிவகுமார் முதல்வர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, ”கர்நாடகாவில் வரும் நாட்களில் வேகமான அரசியல் முன்னேற்றங்கள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான போட்டி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா, ”வீரப்ப மொய்லி ஒரு மூத்த தலைவர். அவர் தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இறுதியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு முடிவு செய்யும். அவரது கருத்தை நான் மறுக்க மாட்டேன். அதேபோல், ஒரு சட்டமன்ற உறுப்பினரும் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவை அனைத்தும் தனிப்பட்ட கருத்துகள். ஆனால் இறுதியில் உயர்மட்டக் குழுதான் முடிவு செய்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜர்கிஹோலி, “முதல்வர் மாற்றப்படுவார் என்றோ அல்லது முதல்வர் மாற்றப்பட மாட்டார் என்றோ நான் கூற முடியாது. உயர்குழுவின் விருப்பப்படி எதுவும் நடக்கலாம். யார் இதுகுறித்து கருத்து கூறினாலும், இறுதியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல், “நம் திருப்திக்காக நாம் ஏதாவது சொல்லலாம், ஆனால் அது இறுதியானது அல்ல. உயர் கட்டளை சொல்வதுதான் இறுதியானது” எனத் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் குறித்து பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “உயர்மட்டக் குழுதான் முடிவு செய்யும் என்று நான் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். மொய்லி அல்லது வேறு யாராவது என்ன சொன்னாலும் அது முக்கியமல்ல, உயர்மட்டக் குழு என்ன சொல்கிறதோ, அதுவே இறுதியானது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனால், டி.கே. சிவகுமார் கர்நாடக முதல்வராக நியமிக்கப்படவுள்ளரா என கேள்வி எழுந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்த நிலையில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே போட்டி ஏற்பட்டது. பின்னர், இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக கூறி, காங்கிரஸ் மேலிடம் அவர்களை சமாதானம் செய்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.