ARTICLE AD BOX
மாருதி சுசுகி இந்தியா, ஏப்ரல் 2025 முதல் கார்களின் விலையை 4% வரை உயர்த்துகிறது. மூலதன மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.

நாட்டின் மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா, அதிகரித்து வரும் மூலதனச் செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் காரணமாக ஏப்ரல் 2025 முதல் கார்களின் விலையை 4% வரை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

மாடலைப் பொறுத்து விலை உயர்வு மாறுபடும். மாடல் வாரியான விலை உயர்வை நிறுவனம் குறிப்பிடவில்லை. மாருதி தனது புதிய கார்களை நெக்ஸா மற்றும் அரினா விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனை செய்கிறது.

நெக்ஸா விற்பனை நிலையங்கள் இக்னிஸ், பலேனோ, சியாஸ், ஃபிராங்க்ஸ், கிராண்ட் விட்டாரா, ஜிம்னி, எக்ஸ்எல்6 மற்றும் இன்விக்டோ போன்ற மாடல்களை வழங்குகின்றன. அரினா விற்பனை நிலையங்கள் மூலம் ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலியோ, ஈகோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், டிசையர், பிரெஸ்ஸா மற்றும் எர்டிகா ஆகியவை விற்கப்படுகின்றன.

"மூலதனச் செலவுகள் மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்து வருவதால், ஏப்ரல் 2025 முதல் மாருதி நிறுவனம் கார்களின் விலையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது. விலை உயர்வு 4% வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது மாடலைப் பொறுத்து மாறுபடும்" என்று மாருதி தெரிவித்துள்ளது.

"நிறுவனம் தொடர்ந்து செலவுகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் பாடுபடும். அதே வேளையில், அதிகரித்த செலவில் ஒரு பகுதியை சந்தைக்கு மாற்ற வேண்டியிருக்கிறது" எனவும் மாருதி நிறுவனத் கூறியுள்ளது.

OEM உற்பத்தியாளர்கள் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை கார் விலையை அதிகரிக்கின்றனர். ஏற்கெனவே ஜனவரி 2025 இல் மாருதி தனது கார்களின் விலையை 4% வரை உயர்த்தியது.