ARTICLE AD BOX

பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் “ஈ சாலா கப் நம்தே …ஈ சாலா கப் நம்தே” என கோஷமிட தொடங்கிவிடுவார்கள். விராட் கோலி இதனை ஆரம்ப காலத்தில் சொல்லியதில் இருந்து இந்த வார்த்தை ஐபிஎல் ஆனால் ட்ரெண்டிங்கில் இருக்கும் வார்த்தைகளில் ஒன்றாக வந்துவிடும் என்று சொல்லலாம். ரசிகர்கள் இதனை அன்பாக பயன்படுத்தினாலும் கூட ஒரு முறைகூட பெங்களூர் கோப்பை வெல்லவில்லை என்ற காரணத்தால் பெங்களூருவை பிடிக்காதவர்கள் இதனை சொல்லியே கலாய்த்து விமர்சனம் செய்யவும் தொடங்கிவிட்டார்கள்.
இதன் காரணமாக ஒரு முறை ஏபி டிவில்லியர்ஸிடம் சென்று விராட் கோலி இனிமேல் யாரும் ஈ சாலா கப் நம்தே சொல்லாதீர்கள் என்று கோபத்துடன் சொன்னதாகவும் அதற்கான காரணத்தையும் விராட் கோலி தன்னிடம் சொன்னதாகவும் பெங்களூர் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ஒரு முறை நான் ஈ சாலா கப் நம்தே என சொன்னேன். இதனை பார்த்த விராட் கோலியிடம் இருந்து எனக்கு ஒரு முறை நேரடியாகவே செய்தி வந்தது.
அந்த செய்தியில் தயவு செய்து இனிமேல் ஈ சாலா கப் நம்தே என்கிற வார்த்தையை பயன்படுத்தாதீர்கள்…அப்படி சொல்லி நான் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு இருக்கிறேன். பலமுறை இப்படி சொல்லி சொல்லி கோப்பையை வெல்லமுடியவில்லை என்பதால் எனக்கு மிகுந்த ஏமாற்றமாகவும் இருக்கிறது” என என்னிடம் விராட் கோலி சொன்னார். நான் இந்த நேரத்தில் விமர்சனம் செய்பவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது ” ஐபிஎல் தொடரும் உலகக்கோப்பையை போன்ற ஒரு விளையாட்டு தான். இதில் 10 சிறந்த அணிகள் விளையாடுகிறார்கள்.சில நேரங்களில் வெற்றிபெறமுடியாமல் போய்விடுகிறது.
கோலி என்னிடம் அப்படி சொல்லியதில் இருந்து நான் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவே இல்லை. இந்த முறை பெங்களூர் அணி சிறப்பாக விளையாடும் என நான் நினைக்கிறேன். சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றால் விராட் கோலியுடன் நானும் கோப்பையை நிச்சயமாக தூங்குவேன்” எனவும் ஏபி டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.