மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை: மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகள் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 39தொகுதிகளில் 8 மக்களவை தொகுதிகளை இழக்கும் சூழல் ஏற்டும். தொகுதிகள் குறைக்கப்பட்டால் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டில் பிரதிநிதித்துவம் குறைத்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில்:
இந்தியாவின் கூட்டாட்சி முறையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கும், தமிழ் மக்களின் நலன் காப்பதற்கும் தேவையான பல்வேறு முயற்சிகளை நாம் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகிறோம். இருப்பினும், நிதிப் பகிர்விலும், அதிகாரப் பகிர்விலும், நம் உரிமைகளைக் காப்பதற்குத் தொடர்ந்து போராட வேண்டிய சூழ்நிலையிலே நாம் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் 2026-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளை ஒன்றிய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ள சூழலில், நம் மாநிலம் சந்திக்கக்கூடிய இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு, தங்கள் கட்சி / இயக்கத்தின் ஆதரவைக் கோருவதற்காக இக்கடிதத்தை நான் தங்களுக்கு எழுதுகிறேன்.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு, மக்களவைத் தொகுதிகளை மறுசீரமைப்பதற்கு வகை செய்தாலும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் அழுத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட அரசியல்சட்டத் திருத்தங்களால் மட்டுமே, இத்தகைய மறுசீரமைப்பு 2026-ஆம் ஆண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு வரையிலும், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை, மாநிலங்கள் முனைப்போடு மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்த இலக்கை அடைவதில் அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளும் ஒரே அளவில் இல்லை.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள், மக்கள்தொகை வளர்ச்சிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டதால்தான், இந்த வளர்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளது. இத்தகைய முன்முயற்சிகள் தான், நாட்டின் மொத்த மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாடு வளர்ச்சி அடைவதற்கான முக்கியக் காரணமாகவும் இருந்து வருகின்றன. எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சியிலும் பெரும்பாங்காற்றி வரும் நமது மாநிலத்தை, தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தண்டிக்க நினைப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும். இரண்டாவது முறையின்படி, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.

தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும்.

மேற்கூறிய பிரச்சினைகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் சார்ந்த பல்வேறு கொள்கை முடிவுகளிலும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் நமது உரிமைகளைப் பறிப்பதாகவே அமைந்துள்ளன. “நீட்” நுழைவுத் தேர்வு, பல்கலைக்கழக மானியக் குழுவின் மூலமாக மாநில அரசுகளின் உயர்கல்வித் துறையின் உரிமைகளை அபகரிப்பது, நமது தனித்துவமான பண்பாடு மற்றும் மொழிப் பாதுகாப்புக் கொள்கைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில், தேசிய அளவிலான கொள்கைகளை நமது மாநிலத்தின் மீது திணிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், இப்பிரச்சினைகளுக்கு எதிராகக் கிளர்ந்து, நமது தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கான ஆற்றலும், அதிகாரமும் இல்லாத நிலை ஏற்படும் அபாயத்தை நாம் எதிர்நோக்கியுள்ளோம்.

எனவே, இந்தக் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு முறையானது, நமது மாநிலத்தைப் பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் அல்லது இந்த முயற்சி நமது கூட்டாட்சிக் கட்டமைப்பை முழுமையாகச் சிதைப்பதற்கு முன்பாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க நமக்குக் குறைந்த அளவு கால அவகாசமே இருப்பதால், நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்க்க வேண்டிய காலமிது. இந்தக் கூட்டு முயற்சிக்கு உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். நாம் அனைவரும் ஒன்றாகக் கலந்தாலோசித்து, நமது மாநிலத்தின் நலன் காப்பதற்கான ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில், தகுந்த உத்திகளைத் தீட்டிச் செயல்படுத்திட தங்களுக்கு இத்தருணத்தில் அழைப்பு விடுக்கிறேன்.

இது தொடர்பாக, மார்ச் 5 அன்று, காலை 10 மணியளவில் தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10-வது தள கூட்ட அரங்கில், நாம் அனைவரும் கலந்தாலோசிக்கலாம் 61601 நான் கருதுகிறேன். இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

The post மார்ச் 5-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article