ARTICLE AD BOX
மாதந்தோறும் ரூ.250 கூட போதும் 30 வருடத்தில் ரூ.17.30 லட்சம் உருவாகும்.. ஜன்நிவேஷ் எஸ்ஐபி அறிமுகம்
பங்குச் சந்தை என்றாலே சூதாட்டம், பங்குச் சந்தையில் போட்ட பணம் கிடைக்காது என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் முன்பு இருந்தது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக பங்குச் சந்தை குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக தற்போது பங்குச் சந்தைகளில் பொதுமக்கள் துணிந்து முதலீடு செய்து வருகின்றனர். மேலும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் வாயிலாக மக்கள் பங்குகளில் முதலீடு செய்து வருகிறார்கள். இருப்பினும் நாட்டின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், கிராமப்புற. நடுத்தர நகரங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் முதல் முறை முதலீட்டாளர்கள், சிறு சேமிப்பாளர்களை மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய தூண்டும் வகையில் எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் மற்றும் எஸ்பிஐ ஆகியவை இணைந்து ஜன்நிவேஷ் எஸ்ஐபி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது ரூ.250ல் தொடங்கி தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர முதலீட்டு திட்டங்களுடன் கூடிய எஸ்ஐபியாகும்.

ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் இந்த எஸ்ஐபியை பயன்படுத்தி எஸ்பிஐ பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டில் முதலீடு செய்யலாம். பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட் என்பது, நிதி மேலாளர் விருப்பப்படி, பங்கு மற்றும் கடனுக்கு இடையில் முதலீடுகளை மூலோபாய ரீதியாக ஒதுக்கும் ஒரு பண்டாகும். ஒருவர் ரூ.250 மாதாந்திர எஸ்ஐபியில் முதலீடு செய்வதன் மூலம், முதலீட்டாளர்கள் 30 ஆண்டுகளில் ரூ.17.30 லட்சத்தை திரட்டும் திறனை பெறுகிறார்கள்.
மியூச்சுவல் பண்டுகளில் முறையான முதலீட்டு திட்டங்களை (எஸ்ஐபி) பயன்படுத்துவதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதிர்பார்க்கலாம். உதாரணமாக ஒரு மியூச்சுவல் பண்ட் திட்டம் ஆண்டுக்கு சராசரியாக 15 சதவீதம் வருவாய் அளிக்கும் என்று வைத்துக்கொள்வோம். அந்த திட்டத்தில் எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் ரூ.250 முதலீடு செய்து வந்தால்30 ஆண்டுகளின் முடிவில் ரூ.17.30 லட்சம் கிடைக்கும். அதேசமயம் எஸ்ஐபி முதலீட்டு காலத்தை 45 ஆண்டுகளாக நீடித்தால், முடிவில் எஸ்ஐபி முதலீடு ரூ.1.63 கோடியாக உயர்ந்திருக்கும்.
Story written by: Subramanian