ARTICLE AD BOX
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு போட்டியாக களமிறங்கும் சீன நிறுவனம்…
எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் வேகமான இணைய சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு போட்டியாக சீன நிறுவனம் ஒன்று அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டத்தில் களமிறங்கியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம் , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளிலும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சீன நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுக்கு நிகராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சீன அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் முன்னிலையில் இருந்த நிலையில் சீன நிறுவனம் டீப்சீக் என்ற செயலியை அறிமுகம் செய்து அமெரிக்க நிறுவனங்களையெல்லாம் ஆட்டம் காண செய்தது. இந்த நிலையில் சீனாவை சேர்ந்த ஸ்பேஸ்செயில் என்ற நிறுவனம் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு போட்டியாக செயற்கைக்கோள்கள் மூலம் அதிவேக இணைய வசதியை வழங்குவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம் 2020ஆம் ஆண்டு முதல் புவி சுற்றுவட்ட பாதைக்கு அருகிலேயே பல்வேறு செயற்கைக்கோள்களை ஏவி அதிவேக இணைய சேவையை வழங்கி வருகிறது. அதாவது புவியின் சுற்றுவட்ட பாதையில் இருந்து 2000 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ளாகவே ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வேகமாக இணைய வசதி கிடைக்கிறது. குறிப்பாக போர் நடைபெறும் பகுதிகள் மற்றும் கடல் பகுதிகளில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேகமாக இணைய வசதி கிடைக்கிறது.
எனவே தகவல் தொடர்புக்கான செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் தற்போது முன்னணி நிறுவனமாக எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் சீனா, அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நிறுவனங்களை செயற்கைக்கோள் பிரிவை நோக்கி ஊக்குவித்து வருகிறது.
சீனாவின் ஷாங்காயை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரக்கூடிய ஸ்பேஸ்செயில் நிறுவனம் ஏற்கனவே புவி சுற்றுவட்ட பாதையில் பூமியிலிருந்து குறைந்த தொலைவிலேயே பல்வேறு செயற்கைக்கோள்களை நிறுவி இருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் 15,000 செயற்கைக் கோள்கள் வரை ஏவ வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு பெரும் போட்டியாக அமையும்.
இந்த நிறுவனம் பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்குவதற்கான ஒப்பந்தத்தையும் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 648 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டு இருக்கிறதாம். தற்போதைக்கு ஸ்டார்லிங்க் நிறுவனம் 7000 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இருக்கிறது, 2030க்குள் இதனை 42,000 என உயர்த்த வேண்டும் என ஸ்டார்லிங்க் திட்டமிட்டுள்ளது.