ARTICLE AD BOX
ஐபிஓவில் ஜொலித்த நிறுவனங்கள்.. சந்தையில் பட்டியலிடப்பட்ட பின் தடுமாறும் பங்குகள்..
2024 செப்டம்பர் முதல் தற்போது வரை இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையிலும், 9 பெரிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களமிறங்கி நிதி திரட்டின. டென்டா வாட்டர்ஸ், குவாட்ரன்ட் ஃபியூச்சர் டெக், அஜாக்ஸ் இன்ஜினியரிங், டாக்டர் அகர்வால் ஹெல்த்கேர், ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், லட்சுமி டென்டல், ஸ்டாண்டர்ட் கிளாஸ் லைனிங் டெக்னாலஜிஸ், ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் மற்றும் இந்தோ ஃபார்ம் எக்கியுப்மென்ட் ஆகிய 9 நிறுவனங்களின் ஐபிஓவுக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஐபிஓவும் வெற்றியடைந்தது. ஆனால் தற்போது இந்த 9 நிறுவனங்களில் இந்தோ ஃபார்ம் எக்கியுப்மென்ட் உள்ளிட்ட 4 பங்குகளின் விலை அதன் வெளியீட்டு விலையை காட்டிலும் குறைந்த விலைக்கு வர்த்தகமாகி வருகின்றன. இது இந்தியாவின் ஐபிஓ காய்ச்சல் தணிந்து விட்டதா அல்லது அடுத்த பெரிய அலைக்கு முன்பு சந்தை சற்று ஓய்வெடுக்கிறதா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்தோ ஃபார்ம் எக்கியுப்மென்ட்
ஜனவரி 3ம் தேதியன்று இந்தோ ஃபார்ம் எக்கியுப்மென்ட் பங்கு என்எஸ்இ-யில் ரூ.256க்கு பட்டியலிடப்பட்டது. இது வெளியீட்டு விலையான ரூ.215ஐ காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். பிஎஸ்இ-யில் 20.19 சதவீத பிரீமிய விலையில் ரூ.258.40க்கு பட்டியலிடப்பட்டது. இந்நிறுவன பங்கு பட்டியலிடப்பட்டது முதல் அதிகபட்சமாக ரூ.293.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.170.66க்கும் சென்றது. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் குறைந்தபட்ச விலையை காட்டிலும் 13.09 சதவீதம் மட்டுமே அதிகமாக உள்ளது.

ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ்
ஸ்டாலியன் இந்தியா ஃப்ளோரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த 23ம் தேதியன்று என்எஸ்இ மற்று பிஎஸ்இ ஆகிய 2 பங்குச் சந்தைகளிலும் ரூ.120 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. இது அதன் ஐபிஓ விலையான ரூ.90ஐ காட்டிலும் 33 சதவீதம் அதிகமாகும். ஆனால் தற்போது இப்பங்கு ரூ.73ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது பட்டியலிடப்பட்ட விலையை காட்டிலும் 39.16 சரிவடைந்துள்ளதை இது காட்டுகிறது.
ஸ்டாண்டர்ட் கிளாஸ் லைனிங் டெக்னாலஜி
2025 ஜனவரி 13ம் தேதியன்று ஸ்டாண்டர்ட் கிளாஸ் லைனிங் டெக்னாலஜி நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கு அதன் வெளியீட்டு விலையை காட்டிலும் 25.7 சதவீத அதிக விலையான ரூ.176க்கு பட்டியலிடப்பட்டது. இந்நிறுவன பங்கின் வெளியீட்டு விலை ரூ.140. தற்போது இப்பங்கின் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. தற்போது இப்பங்கு ரூ.135.01ல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது ஐபிஒ விலையை காட்டிலும் 3.56 சதவீதம் குறைவாகும்.
லட்சுமி டென்டல்
கடந்த ஜனவரி 20ம் தேதியன்று லட்சுமி டென்டல் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் ரூ.542க்கு பட்டியலிடப்பட்டது. இது அதன் வெளியீட்டு விலையான ரூ.428ஐ விட 26.64 சதவீதம் பிரீமியமாக (அதிகம்) இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கு 23.36 சதவீத அதிக விலையில் ரூ.528க்கு பட்டியலிடப்பட்டது. ஆனால் அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு இந்நிறுவன பங்கின் மீதான கவர்ச்சி குறைந்து விட்டதாக தெரிகிறது. தற்போது இந்நிறுவன பங்கு ரூ.354 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இது பட்டியலிப்பட்ட விலையை காட்டிலும் சுமார் 35 சதவீதம் குறைவாகும்.
Story written: Subramanian