ARTICLE AD BOX
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மகசூலை குவிக்கும் இந்திய விவசாயிகள்..
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நுழையாத இடமே இல்லை எனக் கூறும் அளவுக்கு நம்முடைய அன்றாட வாழ்வின் அங்கமாக அது மாறிவிட்டது. இந்த நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவை சேர்ந்த பாராமதி பகுதி விவசாயிகள் ஏஐ தொழில்நுட்பம் மூலம் எப்படி மகசூலை அதிகரித்தனர் என்பது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா விவரிக்கும் வீடியோ தான் அது. அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. இது தொடர்பாக பல்வேறு செயலிகளையும் கருவிகளையும் உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எவ்வாறு நம்முடைய வேளாண் நடைமுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என விவரிக்கிறார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
எக்ஸ் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்கே இந்த வீடியோவை பகிர்ந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நம் வாழ்வை மேம்படுத்த போகிறது என கூறியுள்ளார். இந்த வீடியோவில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் எப்படி விவசாயிகள் அவர்களுடைய விவசாய ஆதாரங்களை பராமரிக்கவும், உற்பத்தியை பெருக்கவும் உதவுகிறது என்பது குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவில் பாராமதி கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் எப்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான கருவிகளைக் கொண்டு வேளாண் நடைமுறைகளை மேற்கொள்கின்றனர் என்பது அதில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த விவசாயிகள் இரசாயனங்களை பயன்படுத்துவது பெருமளவில் குறைந்து இருக்கிறதாம். அதே போல நீர் வீணாவது குறைந்திருப்பதாகவும் சிறந்த முறையில் தங்களுக்கு மகசூல் கிடைப்பதாக கூறுகின்றனர்.
வானிலை தகவல்கள் மற்றும் புவி இருப்பிடம் சார்ந்த தகவல்கள் இரண்டும் ட்ரோன்கள் மற்றும் சாட்டிலைட்டுகள் மூலம் எடுக்கப்பட்டு மண்ணின் தரம் நிகழ் நேரத்தில் ஆய்வு செய்யப்பட்டு இந்த தகவல்கள் அனைத்துமே ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி வாயிலாக ஒருங்கிணைக்கப்படுகின்றன . விவசாயிகளுக்கு அவர்களுக்கு புரியக்கூடிய உள்ளூர் மொழியில் செயற்கை நுண்ணறிவு செயலி வாயிலாக கொண்டு சேர்க்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் அவர்கள் வேளாண் நடைமுறைகளை மாற்றி அமைத்து மிகச்சிறந்த முறையில் லாபம் ஈட்டி வருகிறார்கள். இதன் மூலம் ஏஐ தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால் நம் வாழ்வில் எப்படி அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது காட்டப்படுகிறது
Story written by: Devika