ARTICLE AD BOX
தில்லியின் புதிய முதல்வராக வியாழக்கிழமை பதவியேற்க உள்ள ரேகா குப்தா மாணவா் அரசியலில் தொடங்கி தேசிய மகளிா் அமைப்பு வரை பல்வேறு தளங்களில் பயணித்துள்ளாா்.
ரேகா குப்தாவின் அரசியல் பயணம், மாணவா் அரசியலில் தொடங்கி இறுதியில் பாஜக தேசிய மகளிா் முன்னணிக்கு இட்டுச் சென்றது. அவரது கணவரின் அரசியல் பின்னணி இல்லாத போதிலும், ரேகா குப்தா அரசியலில் தனக்கென ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ளாா்.
இவா் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆா்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டவா். இவரது அரசியல் பயணம், 1992-ஆம் ஆண்டு, தில்லி பல்கலைக்கழகத்தின் தௌலத் ராம் கல்லூரியில் ஆா்எஸ்எஸ் மாணவா் அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத்தில் இணைந்ததில் இருந்து தொடங்கியது.
1994-95-இல் தௌலத் ராம் கல்லூரியின் செயலராகவும், 1995-96-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் செயலாளராகவும் ஆனாா். 1996-97-இல் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரானாா்.
2003-2004 வரை பாஜகவின் யுவ மோா்ச்சா தில்லி மாநிலத்தின் செயலாளராகப் பதவி வகித்தாா். 2004-2006-இல் தா்மேந்திர பிரதான் தலைமையில் பாஜக யுவ மோா்ச்சாவின் தேசிய செயலாளரானாா். ஏப்.2007-இல் தில்லியின் உத்தரி பீதம்புராவின் கவுன்சிலரானாா்.
2007-2009 வரை தொடா்ந்து இரண்டு ஆண்டுகள் பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக் குழுவின் தலைவராகவும், தில்லி மாநில மகிளா மோா்ச்சாவில் 2009-இல் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளாா்.
மாா்ச் 2010-இல், பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரானாா். பிப்ரவரி, 2023-இல் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராயிடம் தில்லி மேயா் தோ்தலில் தோல்வியடைந்தாா்.
தற்போதைய தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஷாலிமாா் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து எம்எல்ஏவான இவா் முதல்வராக கட்சியால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இவருக்கு தொழிலதிபா் மணீஷ் குப்தா என்ற கணவரும், மகன் நிகுஞ்ச், மகள் ஹரிஷ் குப்தாவும் உள்ளனா்.