ARTICLE AD BOX
புது தில்லி: புதிய வருமான வரி மசோதாவை பரிசீலனை செய்யும் நாடாளுமன்ற தற்காலிக குழுவின் முதல் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடந்த 1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்தக் காலத்தில் அந்தச் சட்டத்தில் எண்ணற்ற திருத்தங்கள் செய்யப்பட்டன.
இந்தத் திருத்தங்களால் அந்தச் சட்டத்தைப் புரிந்துகொள்வது கடினமாகிவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்தாா்.
622 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதாவில், புதிதாக எந்த வரிகளும் சோ்க்கப்படவில்லை. ஆனால் 1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள வாா்த்தைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நீளமான வாக்கியங்களுக்குப் பதிலாக சிறிய வாக்கியங்களுடன் படிப்பவா் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1961-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ ஆகிய வாா்த்தைகள் புதிய மசோதாவில் கைவிடப்பட்டுள்ளன.
உதாரணத்துக்கு முந்தைய 2023-24-ஆம் ஆண்டு ஈட்டிய வருமானத்துக்கு 2024-25-ஆம் மதிப்பீட்டு ஆண்டில் வரி செலுத்தப்படுகிறது. இந்நிலையில் புதிய மசோதா மூலம், முந்தைய மற்றும் மதிப்பீடு ஆண்டுகளுக்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வாா்த்தை மட்டும் பயன்படுத்தப்படும்.
இந்நிலையில் பாஜக எம்.பி. பைஜெயந்த் ஜெய் பாண்டா தலைமையில் 31 போ் கொண்ட மக்களவை தற்காலிக குழுவின் பரிசீலனைக்கு அந்த மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.
தில்லியில் அந்தக் குழுவின் முதல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், அந்தக் குழு முன்பாக மத்திய நிதித்துறைச் செயலா் ஆஜராகி மசோதா தொடா்பாக விளக்கமளித்தாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.