ARTICLE AD BOX
மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - மத்திய அரசு கூறுவது என்ன?
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிம ஏலத்தை ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
இந்த சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வந்த விவசாயிகள் குழுவினர், டெல்லியில் நேற்று (22 ஜனவரி) மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'டங்ஸ்டன் சுரங்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில், அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் மற்றும் பல கலாச்சார பாரம்பரிய தலங்கள் உள்ளன என்று விவசாயிகள் குழுவினர் மத்திய அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்' என்றும் மத்திய அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இப்பகுதியில் பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் முக்கியத்துவத்தையும், பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டையும் கருத்தில் கொண்டு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஏல அறிவிப்பு
மத்திய சுரங்கத் துறை அமைச்சகம், கடந்த வருடம், ஜூலை 24ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக்கர்பட்டியில் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிம சுரங்கத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஏல அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.
இந்த ஏலத்தில், வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக, கடந்த வருடம், நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது.
கனிம மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்திருத்தம் 2023-ன்படி இந்த ஏலம் நடத்தப்பட்டதாக, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் கூறியது.
மக்கள் போரட்டம்
"டங்ஸ்டன் சுரங்கம் அமைந்தால், பல்லுயிர் பெருக்க மண்டலமாக மாநில அரசால் அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி முழுமையாக அழிந்துவிடும்" எனக் கூறி, இதற்கு சூழலியல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேலூரில் அரிட்டாபட்டியை உள்ளடக்கிய பகுதிகளை தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர்ப் பெருக்க பாரம்பரிய தலமாக (Biodiversity Heritage Site) மாநில அரசு அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்த அரசாணையை வெளியிட்டது. அதில், "தமிழில் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், 2,200 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோவில்கள், ஏழு சிறு குன்றுகளைத் தொடர்ச்சியாக இப்பகுதி கொண்டுள்ளதாக" கூறப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்கள் மற்றும் 3 தடுப்பணைகள் உள்ளதாகவும் வெள்ளை வல்லூறு, செம்மார்பு வல்லூறு, பாம்புண்ணிக் கழுகு உள்பட 250 பறவைகளும், அலங்கு, மலைப் பாம்பு, தேவாங்கு போன்ற உயிரினங்களும் வாழ்வதாக அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய சுரங்கத்துறையின் அறிவிப்புக்கு எதிராக மதுரையில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், 'டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கு மாநில அரசு அனுமதியளிக்கவில்லை' என, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை; அனுமதியும் வழங்கப்படவில்லை' எனக் கூறியது.
தமிழக அரசின் தீர்மானம்
இதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் 09ஆம் தேதி தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அந்த தீர்மானத்தில், 'இன்றியமையாத கனிமங்களின் உரிமையை மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசு ஏலம் விடக் கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. இதையும் மீறி ஏல நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது" என தெரிவிக்கப்பட்டது.
டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதியானது, குடைவரைக் கோவில்கள், சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், பஞ்ச பாண்டவர் படுகைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டது.
"இப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டது.
தீர்மானத்துக்கு முன்னதாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "எந்தக் காரணம் கொண்டும் தமிழ்நாட்டுக்குள் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வரக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவேளை டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன்" என்றார்.
கடந்த வருடம், நவம்பர் மாதம் முதல் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில், இன்று (ஜனவரி 23) அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு விடுத்த ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)