ARTICLE AD BOX
தமிழ்நாடு மீன்வளத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். இந்நிலையில், கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கடந்த 2006 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.5 கோடி அளவில் சொத்து சேர்த்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்ததற்கான முகாந்திரம் இருந்ததால், இந்த வழக்கு அமலாக்கத் துறைக்கு மாற்றப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 160 ஏக்கர் நிலம் உட்பட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள 18 சொத்துகளை முடக்கியது.
முடக்கம்
இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளை முடக்கி தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதன் எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடந்த 2022-ம் ஆண்டு அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் 18 அசையா சொத்துகள் முடக்கப்பட்டது. ஏற்கனவே அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட சொத்துகளை, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனும், அவரது குடும்ப உறுப்பினர்களும் மறைமுகமாக அனுபவித்து வந்ததும், அதன் மூலம் வந்த வருவாயை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து, மறைமுகமாக சுமார் ரூ.17.74 கோடி வருமானம் ஈட்டியிருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரது தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
ED, Chennai Zonal Office has provisionally attached immovable properties valued at Rs 1.26 Crore located in Thoothukudi, Madurai and Chennai under the provisions of PMLA, 2002 belonging to Anitha R. Radhakrishnan, Minister for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry of…
— ED (@dir_ed) January 23, 2025