மகா கும்பமேளா சிறை கைதிகள் புனித நீராட உபி அரசு சிறப்பு ஏற்பாடு

4 days ago
ARTICLE AD BOX

லக்னோ: மகா கும்பமேளாவையொட்டி உபி சிறைகளில் உள்ள 90,000 கைதிகள் புனித நீராடுவதற்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. உபி மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. வரும் 26ம் தேதி வரை கும்பமேளா நடக்கிறது. கும்பமேளாவில் புனித நீராடுவதற்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 57 கோடியைத் தாண்டியுள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், உபியில் உள்ள 75 சிறைகளில் உள்ள சிறை கைதிகள் புனித நீராடுவதற்கு மாநில அரசு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து சிறைத்துறை டிஜிபி ராமசாஸ்திரி கூறுகையில்,‘‘சிறை துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் உத்தரவின்படி நாளை காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் 75 சிறைகளில் உள்ள 90,000 கைதிகள் புனித நீராடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு ஒவ்வொரு சிறைகளில் உள்ள தண்ணீர் தொட்டியில் புனித நீர் கலக்கப்படும்.

பிரார்த்தனைகள் முடிந்த பின்னர் அந்த தண்ணீரில் கைதிகள் குளிப்பார்கள். இதில் சிறை துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்பார்கள். லக்னோ சிறை வளாகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் தாராசிங் சவுகான் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்பார்கள்’’ என்றார். கோரக்பூர் சிறை அதிகாரி குஷ்வாஹா,‘‘திரிவேணி சங்கமத்தில் இருந்து புனித நீரை எடுத்து வருவதற்கு சிறை காவலர் அருண் மவுர்யாவை அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

The post மகா கும்பமேளா சிறை கைதிகள் புனித நீராட உபி அரசு சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Read Entire Article