ARTICLE AD BOX

Image Courtacy: Women's Premier League (WPL) Twitter
வதோதரா,
5 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின.
இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி. வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக கிரண் நவ்கிரே 51 ரன்களும், ஷெராவத் 37 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக சதர்லேண்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் சார்பில் மெக் லேன்னிங் மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஷபாலி வர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத்தொடர்ந்து களமிறக்கிய ரோட்ரியாஸ் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக சதர்லேண்ட் மற்றும் காப் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர் . சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது.
இறுதியில் சதர்லேண்ட் 41 ரன்களும், காப் 29 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் டெல்லி அணி 19.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. உ.பி. வாரியர்ஸ் அணியின் சார்பில் எக்லஸ்டோன் மற்றும் தீப்தி சர்மா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் உ.பி. வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.