ARTICLE AD BOX

துபாய்,
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய பெற்று விட்டது.
இந்நிலையில் இந்த வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், "நாங்கள் பந்து வீச்சில் நன்றாக தொடங்கினோம். பிட்ச் ஸ்லோவாக மாறும் என்பது எங்களுக்குத் தெரியும். அங்கே எங்களுடைய அனுபவமிக்க பேட்ஸ்மேன்களை நம்பி 240 ரன்களை அடிக்க சென்றோம். குல்தீப், அக்சர், ஜடேஜா ஆகிய அனைவரும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளதால் அவர்களுக்கு பாராட்டுகள் செல்ல வேண்டும். சாத் ஷகீல் - ரிஸ்வான் ஆகியோர் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். அங்கிருந்து போட்டியை நழுவ விடாமல் செய்தது முக்கியமானதாக இருந்தது. ராணா, ஷமி, பாண்ட்யா ஆகியோர் நன்றாக பவுலிங் செய்ததை மறக்கக்கூடாது.
இது எங்களுடைய மொத்த அணியிடம் இருந்து நல்ல செயல்பாடு. எங்களுடைய வீரர்கள் தங்களிடம் இந்திய அணி என்ன எதிர்பார்க்கிறது என்பதை புரிந்துள்ளார்கள். விராட் கோலி நாட்டுக்காக விளையாடுவதை விரும்புகிறார். எனவே அவர் இன்று செய்ததைப் பார்த்து எங்கள் அணி வீரர்களுக்கு ஆச்சரியமில்லை. இது அவருடைய சாதாரணமான நாள். என்னுடைய தசைப் பிடிப்பு காயம் தற்சமயத்தில் நன்றாக இருக்கிறது" என்று கூறினார்.