ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவரது 51வது ஒரு நாள் போட்டி சதமாக அமைந்தது. சோயிப் அக்தர், இர்பான் பதான் என பலரும் கோலிக்கு வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் இதை சச்சின் டெண்டுல்கர் கோலி மட்டுமில்லாமல், ஐந்து இந்திய வீரர்களை குறிப்பிட்டு வெற்றிக்கு காரணமானவர்கள் என கூறி இருக்கிறார்.
இது பற்றி சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் "அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்கான மிகச் சிறப்பான முடிவு இது. நிச்சயம் நீங்கள் உண்மையாகவே நாக்அவுட் செய்து விட்டீர்கள். இந்திய அணியில் மிகச் சிறப்பாக ஆடிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் அதன் பின் அற்புதமாக பவுலிங் வீசிய நமது பவுலர்கள் குல்தீப் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா.. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" எனக் கூறி இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் விராட் கோலியின் சதம் குறித்து பாராட்டி இருக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர், "விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடினால் முழு அளவில் தயார் செய்து கொண்டு வருவார். அதன் பின் சிறப்பாக ஆடுவார். அவர் ஒரு சூப்பர் ஸ்டார்."
"நவீன காலத்து கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் அவருக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவர் உண்மையானவர். 14,000 ரன்களை இன்று கடந்து இருக்கிறார். அடுத்து என்ன செய்வார் என்று தெரியவில்லை. இவர் அனைத்தையும் செய்வார்" என்று கூறியிருக்கிறார் சோயிப் அக்தர்.
எந்த வீரரும் கோலி போல ஒரே டீமை குறி வைத்து அடிக்கலை.. பாகிஸ்தானுக்கு எதிராக 5வது ஆட்டநாயகன் விருது!
இர்பான் பதான் தனது பதிவில் "விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும் சிறப்பாக ஆடி இருக்கிறார். இந்த காதல் கதை தொடரும். இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும்" என்று கூறி இருக்கிறார்.
முன்னதாக இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 241 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 242 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. சுப்மன் கில் 46 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களும் எடுத்தனர். விராட் கோலி மூன்றாம் வரிசையில் இறங்கி கடைசி வரை களத்தில் நின்று சதத்தை நிறைவு செய்தார். அவர் 111 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.