ARTICLE AD BOX
பிப்ரவரி 26ஆம் தேதி மகாசிவராத்திரி- வங்கிகளுக்கு விடுமுறையா?
மும்பை: பிப்ரவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் அரசு மற்றும் தனியார் வங்கிகள் தேசிய விடுமுறை நாட்களிலும், அந்தந்த மாநிலங்களுக்கு உட்பட்ட சில பண்டிகை நாட்களிலும் செயல்படுவது கிடையாது. இது தொடர்பான விடுமுறை நாட்கள் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதன்படி மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும் வங்கிகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்ற வங்கி விடுமுறை நாட்களில் மக்கள் வங்கிகளுக்கு நேரில் சென்று பணிகளை மேற்கொள்ள முடியாது ஆனால் வங்கி செயலிகள் வாயிலாக பணிகளை மேற்கொள்ளலாம். அனைத்து தேசிய விடுமுறை நாட்களிலும் இந்தியாவில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதே போல அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்கப்படுகிறது.
எந்த மாநிலங்களில் வங்கிகள் விடுமுறை:
நடப்பாண்டில் மகாசிவராத்திரி பிப்ரவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி குஜராத், மகாராஷ்ட்ரா, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சண்டிகர், உத்தராகண்ட், ஆந்திரா, தெலங்கானா, ஜம்மு காஷ்மீர் , கேரளா , உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எந்த மாநிலங்களில் வங்கிகள் செயல்படும்:
மகாசிவராத்திரியான பிப்ரவரி 26ஆம் தேதியன்று குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு, திரிபுரா, சிக்கிம், அசாம், மணிப்பூர் மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல செயல்படும். அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மேற்கு வங்கம், டெல்லி, கோவா, பீகார் , மேகாலயா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை கிடையாது வழக்கம் போல செயல்படும்.
வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மக்கள் தாங்கள் டிஜிட்டல் செயலிகளில் பதிவு செய்திருந்தால் வழக்கம் போல செயலி வாயிலாக வங்கி பணிகளை மேற்கொள்ளலாம். அதாவது வங்கியில் எவ்வளவு இருப்பு இருக்கிறது, காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பம் செய்வது, கட்டணங்களை செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது, பண பரிமாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளை வங்கி செயலிகள் மூலம் மேற்கொள்ள முடியும்.
இந்தியாவில் பெரும்பாலான வங்கி சேவைகள் டிஜிட்டல் மூலமே மேற்கொள்ளும் வசதி வந்துவிட்டதால் வங்கி விடுமுறை நாட்களிலும் கவலை இல்லாமல் நாம் பண பரிமாற்றங்களை மேற்கொள்ள முடிகிறது.