ARTICLE AD BOX
6 மாதத்தில் 21% உயர்ந்த தங்கத்தின் விலை.. இன்னும் பல விலை உயர்வை பார்ப்பீங்க-கோல்ட்மேன் சாக்ஸ்
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று குறைந்து விடும் நாளை குறைந்து விடும் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தால், நான் இப்போதைக்கு இறங்க வாய்ப்பில்லை ராஜா என்று தங்கம் அதுபாட்டுக்கு தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. மல்டி கமாட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ்) கடந்த செப்டம்பர் முதல் இதுவரை தங்கத்தின் விலை 21 சதவீதம் அல்லது 10 கிராமுக்கு ரூ.15,080 உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பர் தொடக்கத்தில் எம்சிஎக்ஸில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.71,512ஆக இருந்தது. ஆனால் நடப்பு பிப்ரவரி மாதத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.86,592ஆக உயர்ந்துள்ளது.
ஆக ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை ரூ.15,080 அல்லது 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் வெள்ளியின் விலை 15.6 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 செப்டம்பரில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.84,910 என்ற அளவில் இருந்தது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.91,199ஆக உயர்ந்துள்ளது. ஆக, செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் வெள்ளியின் விலை ரூ.13,289 அதிகரித்துள்ளது. கேடியா கமாட்டி தரவுகளின்படி, இதே காலத்தில் சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை முறையே 18 மற்றும் 16 சதவீதம் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் சர்வதேச நிலவரங்கள்தான். கடந்த ஆண்டு மத்திய கிழக்கு பதட்டங்கள் (இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்), ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை நிச்சயமற்ற தன்மையை தூண்டி விட்டன. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர தொடங்கியது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். அவரது வரி விதிப்பு கொள்கைகள் சர்வதேச அளவில் வர்த்தக போரை ஏற்படுத்தும் அச்சத்தை ஏற்படுத்தியது. வர்த்தக போரின் விளைவாக பணவீக்கம் உயருமோ என்ற அச்சம் எழுந்தது.
இதனையடுத்து சர்வதேச முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீடு செய்வதை குறைத்து பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். டாலர் இன்டெக்ஸ் உயர்வு, உலக நாடுகளின் மைய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன இது போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம், தங்கத்தின் விலை உயர்வு தொடரும் என்று தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,300 டாலரை எட்டும் என்று அந்நிறுவனம் கணித்துள்ளது.
Story written by: Subramanian