நினைவில் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகள்

6 hours ago
ARTICLE AD BOX

நான் பிறந்து, 10 வயதுவரை வாழ்ந்தது மேல் ஆதனூர் என்ற ஊரில். அந்த ஊரில் ஆறு இல்லை. ஓடைதான் இருந்தது. நான் மட்டுமல்ல, அந்த ஊரில் இருந்த அனைவரும் குளிப்பதற்கான இடமாக அந்த ஓடை ஒன்றுதான் இருந்தது. சின்ன ஓடை. மழைக் காலத்தில் இரு கரைகளும் நிறைந்து ஓடும் நீர், கோடை காலத்தில் படிப்படியாகக் குறைந்து, நூல் மாதிரி ஓடும். பள்ளமாக இருக்கிற இடங்களில் மட்டும் நீர் இருக்கும். பாசி பிடித்திருக்கும் அந்தப் பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீரில்தான் மனிதர்கள் குளிப்பார்கள், ஆடு மாடுகள் குடிக்கும். ஊருக்கு மேற்கே பெரிய ஏரி ஒன்று இருந்தது. குடிநீர் எடுப்பதற்காகச் சின்ன கிணறு ஒன்றும் இருந்தது.

நான் 11 வயதில் கழுதூர் என்ற ஊருக்கு வந்துவிட்டேன். அந்த ஊரிலும் ஆறு கிடையாது. ஊருக்குத் தெற்கில் ஒரு ஓடை இருந்தது. பத்தாவது முடிக்கும்வரை நான் அந்த ஓடையில்தான் குளித்தேன். ஊரிலுள்ள மொத்தச் சனங்களும் அந்த ஓடையில்தான் குளிக்க வேண்டும். ஓடையின் நடுவில் நடைபாதை இருக்கும். நடைபாதைக்கு மேற்கே பள்ளமாக இருக்கிற இடத்தில் எஸ்.சி. அல்லாதவர்கள் குளிப்பார்கள். நடைபாதைக்குக் கிழக்கே பள்ளமாக இருக்கிற இடத்தில் எஸ்.சி. மக்கள் குளிப்பார்கள். நடைபாதைக்குக் கிழக்கே எஸ்.சி வண்ணார் துணி துவைக்க வேண்டும். நடைபாதைக்கு மேற்கே பி.சி. வண்ணார் துணி துவைக்க வேண்டும். இது ஊரின் சட்டம். சட்டத்தைப் பெரும்பாலும் மீற மாட்டார்கள். மீறினால் சண்டை நடக்கும். ‘கோவேறு கழுதைகள்’ நாவலில் விவரிக்கப்படுவது இந்த ஓடைதான். என்னுடைய ‘குடும்பம்’ சிறுகதையும் அந்த ஓடையில்தான் நடக்கிறது. அந்த ஓடைக்கும் எனக்குமான உறவு நான் இருக்கும்வரை, என் எழுத்துகள் படிக்கப்படும்வரை இருக்கும். மேல் ஆதனூரிலும் சரி, கழுதூரிலும் சரி கோடை காலத்தில் குளிப்பதற்குச் சிரமப்பட வேண்டும். கிணறுகளில் மட்டும்தான் குளிக்க முடியும். குடிப்பதற்கான தண்ணீரை ஊர்ப் பொதுக் கிணற்றிலிருந்துதான் எடுக்க வேண்டும். தண்ணீர்ப் பஞ்சம் உள்ள ஊர்களில் பிறந்து வளர்ந்தவன் நான்.

என் இளமைக் காலத்தில் நான் பார்த்த முதல் ஆறு வெள்ளாறுதான். எஸ். ஆடுதுறை என்ற ஊரில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாசி மகத்துக்குப் போயிருக்கிறேன். பெரிய ஆறு. இரண்டு பர்லாங் தூரம் நடக்க வேண்டும். நடந்திருக்கிறேன். ஆற்றில் ஊற்றுத் தோண்டி, குடிப்பதற்குத் தண்ணீர் எடுத்துக்கொண்டுபோனதை அங்குதான் நான் முதன்முதலாகப் பார்த்தேன். காலையிலும் மாலையிலும் தண்ணீர் எடுப்பதற்காகப் பெண்களும் சிறார்களும் ஆற்றுக்குப் போவார்கள். எஸ்.ஆடுதுறையில் ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றை, நான் கழுதூரில் ஓடிக்கொண்டிருப்பதாக மாற்றி ‘செடல்’ நாவலில் எழுதினேன். ஒரு நிஜம் பொய்யாகி மற்றொரு நிஜமாக மாறுகிறது. இலக்கியப் பதிவுகளில் இப்படித்தான் நடந்திருக்கிறது. நடந்திருக்க வேண்டும்.

1982இல் +2 படிப்பதற்காகச் சேப்பாக்கம் என்ற ஊருக்குப் போனேன். அந்த ஊரில் மணிமுத்தாறு ஓடிக்கொண்டிருந்தது. இரண்டாண்டுகள் நான் அந்த ஆற்றில்தான் குளித்தேன். என்னோடு விடுதியில் தங்கிப் படித்த மாணவ மாணவிகளும் ஊர்மக்களும் அந்த ஆற்றில்தான் குளிப்பார்கள். அங்கும் குளிப்பதற்கு, தண்ணீர் எடுப்பதற்குத் தனித்தனி இடம்தான். நம்முடைய ஆறுகளும் ஓடைகளும் சாதியோடு தொடர்புடையதுதான். நடக்கவே முடியாதவர்கள் மட்டும்தான் வீட்டில் குளிப்பார்கள். அந்த ஊர்ச் சனங்கள் குடிப்பதற்கான நீரை ஆற்றில் ஊற்றுத் தோண்டி எடுத்துக்கொண்டுபோவார்கள். காலையில் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போகும் பெண்களைப் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடக்க வேண்டும். ஆற்றுக்குத் தண்ணீர் எடுக்கப் போக மாட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது. அவசரம் என்றால் மட்டும் ஊர்ப் பொதுக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். அப்போது எல்லார் வீட்டிலும் ஒரு வாளியும் கயிறும் இருக்கும்.

1984-1987இல் நான் திருச்சியில் படித்தேன். திருச்சி என்றாலே காவேரி ஆறும் கொள்ளிடம் ஆறும்தான் நினைவுக்கு வரும். நான் திருச்சியில் இருந்த மூன்றாண்டுகளில் ஒரு முறைகூட காவேரியிலோ கொள்ளிடத்திலோ குளித்ததே இல்லை. தண்ணீர்ப் பஞ்சம் நிறைந்த ஊரிலிருந்து போன நான் காவேரியிலும் கொள்ளிடத்திலும் குளிக்காமல்போனது ஆச்சரியம்தான்.

1992இல் ஆசிரியரான பிறகு மாணவர்களைச் சுற்றுலாவுக்கு அழைத்துப்போனபோது காவேரி ஆற்றில் ஒருமுறை குளிக்க நேரிட்டது. முக்கொம்பையும் அன்றுதான் பார்த்தேன்.

1984-87இல் கல்லூரி விடுதிக் குளியலறையில்தான் குளித்தேன். ஓடையில், கிணற்றில் குளித்ததுபோல் அது இல்லை. 1997இல் எனக்குத் திருமணம் நடந்த பிறகுதான் நான் நிரந்தரமாகக் குளியலறையில் குளிக்கிற ஆளாக மாறிவிட்டேன். ஊர் ஆட்களோடு குளிப்பது, நண்பர்களோடு கிணற்றில் குளிப்பது என்பதெல்லாம் 1997இல் முடிவுக்கு வந்துவிட்டது. ஆற்றிலோ ஓடையிலோ கிணற்றிலோ குளிப்பதற்காகப் போகிறவர்கள் ஒருநாளும் தனியாகப் போக மாட்டார்கள்.

1997இல் நான் விருத்தாசலம் நகரத்தில் தங்கத் தொடங்கினேன். இந்த ஊரின் பழைய பெயர் திருமுதுகுன்றம். விருத்தாசலத்தில் மணிமுத்தாறு ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 27 ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட அந்த ஆற்றில் குளித்ததில்லை. ஆற்றில் ஊற்றுத் தோண்டி தண்ணீர் எடுத்துக்கொண்டுபோன ஒரு பெண்ணைக்கூட நான் பார்த்ததில்லை. பாலம் உடைந்துபோன சமயத்தில் ஆற்றின் குறுக்கே நடந்தும் டூவீலரிலும் ஒரே நாளில் பலமுறை கடந்துசென்றிருக்கிறேன். பெரும் வெள்ளம் வந்து பார்த்திருக்கிறேன். காய்ந்துகிடக்கும் ஆற்றையும் பார்த்திருக்கிறேன். மாசி மகத்தன்று ஒரே ஒருமுறை திதி கொடுப்பதை வேடிக்கைபார்ப்பதற்காகச் சென்றிருக்கிறேன். மாசி மகத்தன்று ஆறு முழுவதும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள்.

மணிமுத்தாறு பற்றியும், மணிமுத்தாற்றின் தெற்குக் கரையில் அமைந்திருக்கிற, கண்டராதித்த சோழனால் கட்டப்பட்ட, பழமலை நாதர் கோயில் பற்றியும் நிறையப் பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. திருநாவுக்கரசர் (7ஆம் நூற்றாண்டு) ‘கருமணியை, கனகத்தின் குன்று ஒப்பானை’ என்ற திருத்தாண்டகம் எழுதியிருக்கிறார். திருஞான சம்பந்தர் (9ஆம் நூற்றாண்டு), ‘மத்தாவரை நிறுவி’ என்ற பதிகத்தையும் ஏழு வகையிலான தேவாரப் பதிகங்களையும் எழுதியிருக்கிறார். சுந்தரர் (9ஆம் நூற்றாண்டு) ‘நஞ்சியிடையின்று நாளை’ என்ற பதிகத்தையும், ‘மெய்யை முற்றாப்பொடி பூசியோர் நம்பி’ என்ற பதிகத்தையும் எழுதியிருக்கிறார். 9ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்திருந்தாலும் அவரைப் பற்றிய ஒரு கதை இன்றும் எழுத்தில் மட்டுமல்ல, மக்கள் மனதிலும் பதிந்திருக்கிறது.

பழமலை நாதர் பற்றிப் பதிகம் பாடியதற்காக அவருக்குப் பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன. அந்தப் பொற்காசுகளை நான் எப்படி ஆரூருக்கு (திருவாரூர்) எடுத்துச்செல்வேன் என்று பழமலை நாதரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு, “சுந்தரனே நீ இப்பொன்னை திருமணிமுத்தாற்றில் இட்டுச்செல்க. ஆரூரிலுள்ள கமலாயத்தில் கிடைக்குமாறு செய்வோம்” என்று பழமலை நாதர் கூறினார். அதன்படியே பன்னிரண்டாயிரம் பொற்காசுகளை மணிமுத்தாற்றிலேயே கொட்டிவிட்டு, ஆரூர் செல்கிறார். தன் மனைவி பறவையாரை அழைத்துக்கொண்டுபோய்க் கமலாயத்தில் பொற்காசுகளைத் தேடுகிறார். கிடைக்கவில்லை. அதற்கு அவருடைய மனைவி, “ஆற்றிலே போட்டுவிட்டுக் குளத்திலே தேடுகிறீரா?” என்று கேட்டிருக்கிறார். “பொன் செய்த மேனியினீர்” என்ற பதிகத்தைப் பாடியதும், பன்னிரண்டாயிரம் பொற்காசுகள் கிடைத்திருக்கின்றன என்பது கதை. மக்கள் மனதிலே நிலைத்துவிட்ட கதை. சுந்தரர் பாடிய பதிகங்கள் வெகுமக்கள் நினைவில் இல்லை.

மணிமுத்தாறு பற்றி மற்றொரு கதையும் இருக்கிறது. இலக்கியப் பதிவுகளாகவும் இருக்கின்றன. கங்கையிலே குளித்துக் காசியிலே இருக்கிற விசுவநாதரை வணங்கினால் ஏற்படும் புண்ணியத்தைவிட, விருத்தாசலத்திலுள்ள மணிமுத்தாற்றில் குளித்துவிட்டுப் பழமலை நாதரை வணங்கினால் கிடைக்கும் புண்ணியம் அதிகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. கதையாகவும் இன்றுவரை சொல்லப்பட்டுவருகிறது. “காசிய விட வீசம் பெருசு விருத்தகாசி” என்று வாய்மொழியாகச் சொல்லப்பட்டுவருகிறது.

எங்களுடைய கிராமங்களில் யாராவது இறந்துவிட்டால், பிணத்தைத் தூக்குவதற்கு முன் பிள்ளைகள், உறவினர்கள் பிணத்தைச் சுற்றிவரும்போது, வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள், “சொர்க்கம் சேர, காசி விசுவநாதம் சேர, விருத்தகாசி சேர” என்று சொல்வார்கள். அதே மாதிரி, பதினெட்டாம் நாள் கருமகாரியம் நடக்கிற இடத்தில், “சொர்க்கம் சேர, காசி விசுவநாதம் சேர, விருத்தகாசி சேர” என்று சொல்வார்கள். என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’ நாவலிலும், ‘செடல்’ நாவலிலும், “சொர்க்கம் சேர, காசி சேர, விருத்தகாசி சேர” என்று நான்கு இடங்களில் பதிவாகியிருக்கிறது. விருத்தகாசி என்பது விருத்தாசலத்தைத்தான் குறிக்கிறது என்பதை அறியாமலேயே ‘விருத்தகாசி சேர’ என்று எழுதியிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.

இன்று மணிமுத்தாற்றின் நிலைமை வேறு. ஆற்றின் கிழக்குக் கரையில் நிறையக் கல்யாண மண்டபங்கள் இருக்கின்றன. நிறைய மருத்துவமனைகள் இருக்கின்றன. மருத்துவமனைக் கழிவுகளும் கல்யாண மண்டபக் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக மணிமுத்தாறு இருக்கிறது.

தஞ்சாவூரையும் கும்பகோணத்தையும் சேர்ந்த எழுத்தாளர்கள், காவேரி பற்றியும் கொள்ளிடம் பற்றியும் பக்கம்பக்கமாக விவரித்தும் வர்ணித்தும் எழுதியிருக்கிறார்கள். ஓடிக்கொண்டே இருக்கிற நீரில் வாழ்க்கை முழுவதும் குளிப்பதற்கான பாக்கியத்தைப் பெற்றவர்கள். இந்தத் தலைமுறையில் காவேரி பற்றி, கொள்ளிடம் பற்றி எழுதுகிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

திருப்பூரில் ஓடிக்கொண்டிருக்கும் நொய்யல் ஆற்றின் நிலை பற்றி சுப்ரபாரதிமணியன் சாயத்திரை என்ற நாவலை எழுதியிருக்கிறார். சென்னையில் ஓடிக்கொண்டிருக்கும் கொசஸ்தலை ஆறு பற்றி, ‘குறத்தியாறு’ என்ற நாவலை கௌதம் சன்னா எழுதியிருக்கிறார். அடையாறு பற்றி அண்மையில், ‘அடையாற்றுக்கரை’ என்ற நாவல் வந்திருக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆறுகள் எப்படியிருந்தன என்பது குறித்து ஒரு சித்திரத்தை நமக்கு வரைந்துகாட்டுகிறது. ஆறுகளும் ஓடைகளும் ஏரிகளும் இன்று பொதுமக்கள் குப்பைகள் கொட்டுகிற இடமாகவும், மருத்துவக் கழிவுகள் கொட்டுகிற இடமாகவும், நகராட்சி நிர்வாகம் குப்பைகளை எரிக்கிற இடமாகவும் மாற்றிவிட்டன, அல்லது மாற்றிக்கொண்டிருக்கின்றன.

படிப்பறிவே இல்லாத, நாகரிகம் என்றால் என்னவென்றே அறியாத காலத்தில் வாழ்ந்த மனிதர்கள்தான் ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஏரியையும் குளத்தையும் வெட்டினார்கள். படிப்பறிவு பெற்ற, நாகரிகம் கற்ற இக்காலத்தில்தான் ஒவ்வொரு ஏரியையும் வீட்டுமனைகளாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு குளத்தையும் குப்பை கொட்டுகிற இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

மதுரைக் காஞ்சியில் விவரிக்கப்பட்ட இடமும், நாம் இன்று பார்க்கிற வைகை நதியும் ஒன்றா? மதுரை வைகை ஆறு பற்றி நவீன எழுத்தாளர்கள் யாரும் எழுதியது மாதிரி எனக்குத் தெரியவில்லை. மாற்றங்கள் நிகழத்தான் செய்யும். கடந்த 25 ஆண்டுகளில் நடந்தது மாற்றங்கள் அல்ல, சூறாவளி. ஆற்றின் கரையோரங்களில்தான் நகரங்கள் உருவாயின. நாகரிகங்கள் செழித்து வளர்ந்தன எனப் படித்திருக்கிறேன். ஆற்றின் கரை ஓரங்களில்தான் சுடுகாடுகளும் கோயில்களும் இருக்கின்றன. விருத்தாசலத்திலுள்ள கொளஞ்சியப்பர் கோயிலும் பழமலைநாதர் கோயிலும் ஆற்றின் கரைகளில்தான் இருக்கின்றன.

நவீன இலக்கியத்தில் தாமிரபரணி ஆறு பற்றி, விக்ரமாதித்யன், கலாப்ரியா, வண்ணதாசன், வண்ணநிலவன் போன்றவர்கள் தங்களுடைய எழுத்துகளில் பதிவுசெய்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் ‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு எழுதியிருக்கிறார்.

ஆடு மாடுகள் நீர் குடித்த, ஆடு மாடுகளைக் குளிப்பாட்டிய, பாசி படர்ந்த, அழுக்காகி ஓடிக்கொண்டிருந்த, அல்லது தேங்கிநின்ற நீரில் குளித்தது நினைவில் இருக்கிறது. அதுவே என் எழுத்துக்கான ஆற்றலைத் தருகிறது. கிணற்றிலோ ஓடையிலோ குளித்துவிட்டு, உடம்பையும் துணியையும் சூரிய ஒளியில் காயவைத்த நாள்களை நினைக்கையில் மனதிலும் நினைவிலும் அவ்வளவு இனிப்பு சேர்கிறது. இப்போது ஒவ்வொரு நாளும் மூடிய அறைக்குள் நின்றுகொண்டு குளிக்கும்போதும், நான் குளித்துத் திளைத்த ஓடைகளும் ஆறுகளும் என் நினைவிலும் மனதிலும் நிதானமாகக் குளித்துவிட்டுப்போகின்றன. எந்த அவசரமும் இல்லாமல் ஓடையில், கிணற்றில் குளிக்கும்போது ஏற்பட்ட சந்தோஷம், தனியாகக் குளியலறைக்குள் குளிக்கும்போது ஏற்படுவதில்லை.

விழுப்புரத்துக்குத் தெற்கில் அரசூரை ஒட்டி முன்பு ஓர் ஆறு இருந்தது. இப்போது அந்த ஆறு இல்லை. காடாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி அந்த ஆறு இப்போது என் நினைவில் மட்டும்தான் இருக்கிறது. நினைவில் ஓடும் ஆறுகள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

Read Entire Article