ARTICLE AD BOX
உலகைப் படைத்துக் காத்து இறுதியில் அழிக்கும் முத்தொழில்களையும் ஒருவனே செய்தாலும், இந்து மதத்தில் படைக்கும் தொழிலைப் பிரம்மனும் காக்கும் தொழிலைத் திருமாலும் அழித்தல் அல்லது சம்ஹாரத் தொழிலைச் சிவனும் செய்வதாகக் கூறப்பட்டுள்ளது. ஆகவேதான் இவர்களை மும்மூர்த்திகள் என்று வேதங்களும் புராணங்களும் அழைக்கின்றன. ஆனால், இம்மூவர்களுள் சிவனை மட்டுமே கூத்தபிரானாக, ஆனந்த நடனமிடும் நடராஜராக நாட்டியத் தோற்றத்தில் வழிபடுகிறோம். இதன் தத்துவப் பின்னணிதான் என்ன?
ஆனந்த தாண்டவமும் மனித வாழ்க்கையும்
இந்நிலவுலகில் உயிர்கள் உருவாவது, அழிவது, மீண்டும் உருவாவது இதுவே முடிவில்லாத படைப்புத் தத்துவமாகும். அசைவில்லாத இடமாக இருக்கும் பிரம்மனை, சிவபெருமான் ஆனந்த நடனத்தின் மூலம் உயிர்ப்பித்து எழச்செய்கிறார்.
இசைவடிவமான ஒலி எழுப்பும் அலை, கடலில் ஆனந்தக் கூத்தாடுகிறது. கடைசியில் ஆடி ஓய்ந்து அடங்கிவிடுகிறது. வாழ்க்கையின் தத்துவமும் இப்படி எழுவதும், ஆடுவதும் இறுதியில் அடங்குவதுமான உணர்வுகளின் அடிப்படைதானே! இதைத் தான் சிவனின் ஆனந்த நடனமும் நமக்கு உணர்த்துகிறது.
மேலே தூக்கிய வலது கரத்தில் உடுக்கை இருக்கிறது. இது பிறப்பின் ஒலியைக் காட்டுகிறது. மேலே தூக்கிய இடது கையிலோ நெருப்பு இருக்கிறது. இது முடிவில் நேரும் அழிவை உணர்த்துகிறது. இவை இரண்டும் சமநிலையில் இருப்பது. இவை இரண்டையும் நாம் சரிசமமான உணர்வுடன் பார்க்க வேண்டும் என்பதையே காட்டுகிறது.
இரண்டாவது வலதுகை அபய முத்திரையைக் காட்டுகிறது. பிறவியில் இருந்து அழிவு வரையில் நமக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை, இறைவனை நம்பினால் அவன் ஏற்றுக்கொண்டு காப்பாற்றுவான் என்பதையே அபய முத்திரை நமக்கு உணர்த்துகிறது.
இரண்டாவது இடதுகை பாதத்தைக் காட்டுகிறது. அந்தப்பாதம் மேலே தூக்கிய பாதம். இறைவனை அகமும் புறமும் தூய்மையுற வழிபட்டால் மாயையிலிருந்து விடுபட்டு மேலேஎழ, வாய்ப்புண்ணடாகும் என்பதையே இது நமக்கு மறைமுகமாகக் காட்டுகிறது.
வலதுகால் கீழே முயலகன் என்ற அரக்கனின் உடலை மிதித்துக் கொண்டிருக்கிறது. தீயசக்திகளை நாம் மிதித்து அடக்கி வெல்ல வேண்டும் என்பதையே இது நமக்கு வலியுறுத்துகிறது.
ஆனந்த நடனமிடும் நடராஜர் உருவம் உலகத்தின் இயக்கம் அனைத்தையும் ஆட்டுவிக்கும் இறைவனின் வடிவம். இதனையே திருநாவுக்கரசர் தமது ஆறாம் திருமுறையில், 'ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே, அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே' என்று பாடியுள்ளார்.
தொடர்ந்து இயங்கும் சக்தி தோன்றுவதையும் எழுவதையும், அடங்குவதையும் உணர்த்தும் உன்னத சித்திரமே நடராஜரின் திருக்கோலமாகும். ஆகவேதான் இத்திருவுருவச் சிறப்பினை அருளாளர்கள் பலரும் போற்றிப் பாடியுள்ளனர்.
சேக்கிழார் :
'உலகெல்லாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீ்ர்மலி வேணியன்
அழகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்'
என்று சேக்கிழார் சுவாமிகள் தமது திருத்தொண்டர் புராணத்தின் கடவுள் வாழ்த்தில் அம்பலத்தில் ஆடும் ஈசனையே வாழ்த்திப் பாடுகிறார்.
அப்பர்பெருமான் :
திருநாவுக்கரசர் சுவாமிகளும் தமது கோயில் திருப்பதிகத்தில் ஆனந்த திருநடனத்தைப் பல பாடல்களில் பாடி மகிழ்கிறார். அவற்றுள் ஒருசில...
(திருநாவுக்கரசர் தேவாரம்-783)
'குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே'.
இப்பாடலில் தில்லைச் சிற்றம்பல நாதனின் உருவச்சிறப்பு வணிக்கப்படுகிறது.
(திருநாவுக்கரசர் தேவாரம்-781)
'ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை
கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே'
இந்தப் பாடலில் இடம்பெறும் 'என்றுவந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே' என்னும் தொடர் நடராஜரின் உயரே எழுப்பிக் காட்டும் அருள் தன்மையுடைய வலக்கரமானது, 'என்று வந்தாய்' என்று தம்மை வினவி அருள்புரியும் திருக்குறிப்பை உணர்த்துகிறது.
(திருநாவுக்கரசர் தேவாரம்-789) :
அடுத்த பாடலில் அப்பர் பெருமான் தில்லைநாதனின் திருவடிச் சிறப்பினை எடுத்துரைக்கின்றார்.
'சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை
வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே'
ஈசனது திருப்பாதமானத் தக்கன் வேள்வியில் பங்கேற்ற சந்திரனைத் தேய்ப்பதற்கும், காலனை உதைப்பதற்கும் நாராயணணும் பிரம்மனும் தேடும் தன்மையிலும் தூக்கி எடுக்கப் பெற்றது. அத்திருப்பாதம் தில்லைச் சிற்றம்பலத்தில் நடனம் புரிய எடு்க்கப் பெற்றது. அதுவன்றோ நம்மை ஆட்கொண்டது என்று பாராட்டுகின்றார்.
மாணிக்கவாசகர் :
மணிவாசகப் பெருமானும் தம்முடைய கீர்த்தி திருவகவலில், அழகு நிறைந்த இமயமலையின் மேற்பகுதி பொன்மயமாய்த் திகழ்வது போன்று அழகிய சிதம்பரமும் பொன்மயமாகத் திகழ்கிறது. அங்கு இறைவா! நீ நடனம்புரிகின்றாய். உனது அழகுநிறைந்த திருமுகத்தில் புன்னகை பொலியப் பெற்றவளாய் நீ இருக்கின்றாய் என்ற கருத்தினை,
'எழில் பெறும் இமயத்து இயல்புடை அம்பொன்
பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடநவில்
கனிதரு செவ்வாய்...' என்ற அடிகளில் அழகுறப் பாடியுள்ளார்.
இவ்வாறாக, நடராஜர் வடிவம் இறைவனின் ஊழிக்கூத்தினை மட்டுமல்லாது வாழ்க்கைத் தத்துவத்தையும் அழகுணர்ச்சியையும் கலைவெளிப்பாட்டையும் பாரதநாட்டின் சிற்பசாத்திரத்தின் நேர்த்தியையும் உணர்த்துவதாக உள்ளது.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!