ARTICLE AD BOX

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையை அடுத்த 30 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8 மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளடக்கியக் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்க உள்ளது.
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் சிங், கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், தெலங்கானா பி.ஆர்.கட்சியின் கே.டி.ராமாராவ் மற்றும் ஒடிசா, மே.வங்க மாநிலத்தலைவர்கள் உள்ளடக்கிய 24 பேர் பங்கேற்க உள்ளனர்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக நடைபெறும் கூட்டுக்குழுவில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் பல்வேறு மாநில முதல்-மந்திரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் பெயர்கள் அவரவர் தாய்மொழியில் இடம்பெற்றுள்ளது. ஆங்கிலத்திலும் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் வழங்கப்படவுள்ள பரிசுப் பெட்டகத்தில் தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப் புடவை, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெற்றுள்ளன