ARTICLE AD BOX
அனைத்து கீரை வகைகளிலும் நம் உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கின்றன. குறிப்பாக, மணத்தக்காளி கீரையில் குடல் நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. அதன்படி, மணத்தக்காளி கீரையில் சுவையான கடையல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி கீரை,
துவரம் பருப்பு,
சின்ன வெங்காயம்,
பூண்டு,
பச்சை மிளகாய்,
தக்காளி,
பெருங்காயம்,
மஞ்சள் தூள்,
நல்லெண்ணெய்,
உப்பு மற்றும்
கடுகு
செய்முறை:
ஒரு கைப்பிடி அளவிற்கு துவரம் பருப்பை நன்றாக கழுவி விட்டு, கொதிக்கும் தண்ணீரில் போட வேண்டும். இத்துடன் நான்கு சின்ன வெங்காயம், ஆறு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய்கள், நறுக்கிய தக்காளி இரண்டு, சிறிதளவு பெருங்காயம், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இதையடுத்து, இந்தப் பாத்திரத்தை மூடி விட்டு பருப்பை வேகவைக்க வேண்டும்.
பருப்பு முக்கால்வாசி வெந்து வரும் போது, அத்துடன் ஒரு கட்டு மணத்தக்காளி கீரையை சேர்க்க வேண்டும். கீரையை சேர்த்த பின்னர், மீண்டும் 5 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும். அதன் பின்னர், பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி, அதில் இருக்கும் தண்ணீரை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளலாம். தண்ணீரை வெளியேற்றியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையை மசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்ததும் சிறிதளவு கடுகை தாளித்து இத்துடன் சேர்த்தால், மணத்தக்காளி கீரை கடையல் தயாராகி விடும்.
நன்றி - KRR KITCHEN Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.