ARTICLE AD BOX
தெலங்கானாவுக்கு வரும் ராக்கெட் நிறுவனம்.. தமிழ்நாட்டுன் போட்டியா..?
தெலங்கானா: இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய தனியார் ராக்கெட் நிறுவனம் தெலங்கானா அரசுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஹைதராபாத்தை தலைமை இடமாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இந்நிறுவனம் தெலங்கானா மாநிலத்தில் உற்பத்தி ஆலையை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி தெலங்கானா மாநிலத்தில் ராக்கெட் உற்பத்தி, ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் ராக்கெட் சோதனை ஆலை நிறுவப்படும் என ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் கூறியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரக்கூடிய பொருளாதார உச்சி மாநாட்டில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் தெலங்கானா மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தெலங்கானா மாநில அரசு பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய வைப்பதற்கு முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் தனியார் ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனம் தெலங்கானாவில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ முன் வந்துள்ளது.
ஸ்கைரூட் நிறுவனம் தெலங்கானாவில் 500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வில் தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் மாநில தொழில்துறை அமைச்சர் ஸ்ரீதர் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தெலங்கானாவில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய ராக்கெட் தொழில்நுட்ப ஆலை அமைய இருக்கிறது என ரேவந்த் ரெட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் நிறுவனம் விண்வெளி தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவது மகிழ்ச்சி தருகிறது என கூறியுள்ள தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெலங்கானாவிலேயே இந்த நிறுவனம் தன்னுடைய ஆலையை நிறுவுவது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம் விண்வெளி தொழில்நுட்பங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதையும் விண்வெளி சார்ந்த தொழில்நுட்பங்களில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பதையும் இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.
ஸ்கைரூட் நிறுவனத்தின் துணை நிறுவனரான பவன் குமார் தெலங்கானாவில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் தலைமையின் கீழ் 500 கோடியை நாங்கள் முதலீடு செய்கிறோம், தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சியில் எங்கள் நிறுவனம் துணை நிற்கும் என கூறியுள்ளார். தெலங்கானா ரைசிங் மற்றும் ஹைதராபாத் ரைசிங் என்ற இலக்குக்கு தங்கள் நிறுவனம் உறுதுணையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Story written by: Devika