ARTICLE AD BOX
செக் எழுத பிளாக் பேனாவை பயன்படுத்தலாமா? ஆர்பிஐ-யின் விதிமுறைகள் என்ன? அட இது தெரியாம போச்சே!
இன்றெல்லாம் சோசியல் மீடியா பதிவுகளின் தாக்கம் மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. ஏதேனும் ஒரு செய்தி இது போன்ற தளங்களில் வெளிவந்தாலும் மக்கள் அதன் உண்மை தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் முழுமையாக நம்பி விடுகின்றனர். அதில் சில செய்தி உண்மையாக இருக்கிறது சில செய்தி போலியாக உள்ளது.
அப்படித்தான் இந்திய ரிசர்வ் வங்கி கருப்பு பேனாவை கொண்டு செக் எழுதுவதை தடை செய்ததாக பரவிய செய்தி நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி பரவலான விவாதங்களை ஏற்படுத்தியதுடன் அத்தகைய நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்ப வழி வகுத்தது.
ஆனால் பிரஸ் இன்பர்மேஷன் பீரோ (பிஐபி) தனது X பதிவில் இந்த வதந்தியை மறுத்துள்ளது. கருப்பு பேனாவால் செக் எழுதுவதை தடை செய்யும் உத்தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் கூறப்படுகிறது. இந்த கூற்று முற்றிலும் தவறானது. செக் எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட நிறம் பயன்பாடுக வேண்டுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி எந்த வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.
அதோடு பிஐபி துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செக் எழுதுவது குறித்து ஆர்பிஐ கூறுவது என்ன?: ஆர்பிஐ-யின் விதிமுறைகளின் படி செக் எழுதும்போது வாடிக்கையாளர்கள் தெளிவாகவும் செக்கில் விவரங்களில் மாற்றம் செய்ய முடியாத வகையிலும் பர்மனண்ட் இங்கை பயன்படுத்தி எழுத வேண்டும் .ஆனால் செக் எழுதுவதற்கு குறிப்பிட்ட நிறங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஆர்பிஐ எந்த விதிகளையும் விதிக்கவில்லை.
பெறுநர் பெயர் அல்லது தொகை போன்ற முக்கியமான விவரங்களில் எந்தவித மாற்றங்களையும் அல்லது திருத்தங்களையும் செய்ய முடியாத வகையில் எழுத வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்பட்டால் அதற்கு புதிய செக் வழங்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கை மோசடிகளை தடுக்க உதவும்.
எனவே ஏதேனும் போலியான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவினால்.. அது குறித்த விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரி பாருங்கள். ஒரு வேலை உண்மையான அறிவிப்புகள் வெளியானால் உடனடியாக அவை செய்திகளில் வெளியாகும். இதை வைத்து நாம் ஒரு செய்தியின் நம்பகத்தன்மை குறித்து தெரிந்து கொள்ளலாம்.