ARTICLE AD BOX
ரூ. 2.2 கோடியை ஆட்டைய போட்ட கில்லாடி கும்பல்.. எப்படி எல்லாம் ஸ்கெட்ச் போடுறாங்க!
இன்றைய காலகட்டத்தில் காவல்துறையில் பதிவாகும் பெரும்பாலான வழக்குகள் மோசடி குறித்து தான் உள்ளது. ஆனாலும் நாளொன்றுக்கு 2 முதல் 3 சம்பவங்கள் நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடக்கிறது. அதேபோல புனைவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி மேலாளரை பொய்யான வாக்குறுதியை வழங்கி சைபர் மோசடிக்காரர்கள் ஏமாற்றியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர் ரூ.2.22 கோடியை இழந்துள்ளார். இந்தச் சம்பவம் எப்படி நடந்தது? என்பது குறித்து பார்ப்போம்.
ஒவ்வொரு முறையும் மோசடி குறித்த செய்திகள் வெளியாகும் போது அதில் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுக்திகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ட்ராய் அறிவுறுத்தலின்படி பிறருக்கு அழைப்பு விடுக்கும் போது ஒரு அறிவிப்பு கூறப்படுகிறது. அதில் மோசடி குறித்து எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்ற விவரங்கள் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வழங்கப்படுகிறது. அப்படி இருந்தும் சிலர் மோசடிக்காரர்களின் வலையில் விழுகின்றனர்.
அப்படித்தான் இந்த சம்பவத்திலும் பாதிக்கப்பட்டவர் பணத்தை இழந்துள்ளார். அதுவும் பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்படுபவர்கள் ஏமாறும் தொகையும் லட்சக்கணக்கில் தான் உள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வங்கி மேலாளருக்கு மோசடி செய்பவர்கள் மார்ச் மாதம் ஒரு அழைப்பு விடுத்துள்ளனர். ஆரம்பத்தில் ஒரு புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனத்தின் ஊழியர்கள் போல காட்டிக் கொண்டு பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளனர்.
காப்பீட்டு கொள்கைகளில் முதலீடு செய்வதன் மூலம் லாபகரமான வருமானம் கிடைக்கும் என்று கூறி மொத்தமாக ரூ.1 லட்சம் ரூபாயை முதலீடு செய்யும்படி அவரை வற்புறுத்தியுள்ளனர். மாதங்கள் செல்லச் செல்ல அவருக்கு போலி ஆவணங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க லாபத்தால் தவறான உறுதி மொழிகளையும் கொடுத்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர் அதிக பணத்தை முதலீடு செய்ய தொடங்கினார்.
2025-ஆம் ஆண்டின் ஜனவரி 13-ஆம் தேதி அன்று இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இந்தச் சம்பவம் தெரிவதற்கு முன்பே பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் ரூ. 2.22 கோடிக்கும் அதிகமாக மோசடிக்காரர்களின் வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளார்.
மோசடியில் சிக்காமல் இருக்க மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: அதிக தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறும் வாக்குறுதிகளை நம்புவதற்கு முன்பு சற்று சிந்தியுங்கள். ஒருவேளை எடுத்தவுடன் அதிக லாபம் பெறலாம் என்ற திட்டங்கள் இருந்தால் இங்கு ஏழைகளே இருக்க மாட்டார்கள். எனவே எந்த ஒரு முதலீட்டு திட்டத்தை பற்றியும் தெரிந்து கொள்ளாமல் முதலீடு செய்யாதீர்கள்.விழிப்புணர்வை தவிர இதுபோன்ற மோசடிகளை தவிர்க்க வேறு வழியே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.