ARTICLE AD BOX
சொல்லிவைச்ச மாதிரி.. HCL, விப்ரோ, இன்போசிஸ் கொடுத்த அப்டேட்.. அப்போ பெங்களூர் நிலைமை..?
இந்தியாவின் ஐடி நகரம் என அழைக்கப்படும் பெங்களூர் உடன் கடந்த சில வருடங்களாக ஹைதராபாத் நேருக்கு நேர் போட்டிப்போட்டு வருகிறது. கடந்த சில வருடத்தில் பல பெரும் ஐடி மற்றும் ஜிசிசி நிறுவனங்கள் பெங்களூரை காட்டிலும் அதிகளவில் ஹைதராபாத்-ஐ தேர்வு செய்து அலுவலகம் அமைத்து வருகிறது.
இந்த நிலையில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் மத்தியில் யாருக்கு இந்தியாவின் ஐடி நகரம் என்ற பெயர் என்ற போட்டியில் முக்கிய திருப்பமாக HCL, விப்ரோ, இன்போசிஸ் ஆகிய 3 ஐடி சேவை நிறுவனங்கள் அந்த வாரத்தில் அடுத்தடுத்து தனது அலுவலகத்தை ஹைதராபாத்-ல் விரிவாக்கம் செய்வதாக அறிவித்தது.
Infosys: இந்தியாவின் முன்னணி ஐடி சேவை வழங்குநரான இன்ஃபோசிஸ், தெலுங்கானாவில் தனது செயல்பாடுகளை கணிசமாக விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தின் புறநகர்ப் பகுதியான பொச்சாரத்தில் உள்ள தனது தற்போதைய ஐடி வளாகத்தை விரிவுபடுத்த உள்ளது.
இங்கு ஏற்கனவே 35,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த விரிவாக்கம் மூலம் கூடுதலாக 17,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, ஐடித் துறைக்கான முக்கிய மையமாக தெலுங்கானாவின் வளர்ந்து வரும் அந்தஸ்தை வலியுறுத்துகிறது.
டாவோஸ் நகரில் நடக்கும் WEF கூட்டத்தின் போது, இன்ஃபோசிஸ் சிஎஃப்ஓ ஜெயேஷ் சங்கராஜ்கா மற்றும் தெலுங்கானா ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு ஆகியோர் இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் முதல் கட்டம் இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டத்தில் ரூ.750 கோடி முதலீட்டில் புதிய ஐடி கட்டிடங்கள் கட்டப்படும், இதன் மூலம் 10,000 ஊழியர்களுக்கு பணிபுரியும் இடம் கிடைக்கும்.
HCL Tech: இந்தியாவின் மற்றொரு முன்னணி ஐடி சேவை நிறுவனமான எச்.சி.எல்.டெக், ஹைதராபாத்தில் புதிய மையத்தை சமீபத்தில் திறந்துள்ளது. ஹை-டெக் சிட்டியில் அமைந்துள்ள இந்த நவீன அலுவலகம் 320,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது மற்றும் 5,000 ஊழியர்கள் இதில் பணியாற்றும் திறன் கொண்டது.
wipro: உலகளாவிய ஐடி சேவைகள் மற்றும் ஆலோசனை நிறுவனமான விப்ரோ லிமிடெட், ஹைதராபாத்தில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஹைதராபாத் நகரின் அருகிலுள்ள கோபன்னபள்ளியில் புதிய ஐடி மையத்தை நிறுவ உள்ளது. இந்த விரிவாக்கம் 5,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டத்தின் போது, விப்ரோ லிமிடெட் நிர்வாகத் தலைவர் ரிஷத் பிரேமி, தெலுங்கானா முதல்வர் ஏ.ரேவந்த் ரெட்டி மற்றும் ஐடி மற்றும் தொழில்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு ஆகியோரை சந்தித்த போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய வசதி இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.