ARTICLE AD BOX
டிரம்ப் வந்த உடன்.. ரஷ்யா - இந்தியா மத்தியில் முதல் தடுமாற்றம்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?!
அமெரிக்க அரசு ரஷ்ய எரிசக்தி மற்றும் எண்ணெய் வளத்துறை மீது விதித்த தடைகளால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி பாதிக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மார்ச் மாதத்திற்கு தேவையான ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு போதுமான கப்பல்களைப் பெறுவதில் சிக்கலை எதிர்கொண்டு உள்ளதாக தெரிகிறது.
ஜனவரி 10ஆம் தேதி, அமெரிக்க அரசு, ரஷ்ய எரிசக்தித் துறையின் மீது விரிவான தடைகளை விதித்தது. இதில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தியாளர்களான கஜ்ப்ரோம் நெஃப்ட் மற்றும் சர்குட்நெஃப்டகாஸ் ஆகியவற்றின் மீதான தடைகள், ரஷ்ய எரிபொருள் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள 183 கப்பல்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பது மற்றும் பல்வேறு வர்த்தகர்கள், சேவை வழங்குநர்கள், டாங்கர் உரிமையாளர்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த தடைகள் இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் விற்பனை திறனை கணிசமாக பாதித்துள்ளன. குறிப்பாக, தடைகள் அறிவிக்கப்பட்ட போது இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மார்ச் மாத ஆர்டருக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தன. இந்த தடைகள் மூலம் ரஷ்யாவில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் அளவு 20 சதவீதம் வரையில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிதியியல் இயக்குனரான வெட்சா ராமகிருஷ்ண குப்தா இதுகுறித்து கூறுகையில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு ரஷ்ய எண்ணெய் வழக்கம் போல் கொள்முதல் செய்யப்பட்டாலும், மார்ச் மாதத்திற்கான எண்ணெய் வாங்க போதுமான கப்பல்களை பெறுவதில் பெரும் சவாலாக உள்ளது என தெரிவித்தார்.
இதன் மூலம் இனி வரும் காலத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மட்டும் அல்லாமல் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் சார்பு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மாற்று வழியாக புதிய கப்பல்களை இந்த வழித்தடத்தில் கொண்டு வருவதன் மூலம் எளிதாக இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும். ஆனால் இதற்கு சில காலம் தேவைப்படும்.
அக்டோபர்-டிசம்பர் காலாண்டில், பார்த் பெட்ரோலியம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த கச்சா எண்ணெயில் சுமார் 31% ரஷ்ய எண்ணெய் ஆக இருந்தது. இருப்பினும், தற்போதைய தடைகளின் காரணமாக இந்த எண்ணிக்கை மார்ச் மாதத்தில் 20% ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 2024 தொடக்கத்தில், ரஷ்ய எண்ணெய் பிபிசிஎல் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் 34-35% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.