ARTICLE AD BOX
டிரம்பின் அந்த ஒரு உத்தரவு.. குழந்தை பெற்றெடுக்க C-Section செய்யும் NRI தம்பதிகள்..!
அமெரிக்காவில் தங்கள் குழந்தைக்கு பிறப்பால் கிடைக்கும் குடியுரிமை வேண்டும் என்பதற்காக அங்கே வசிக்கக்கூடிய இந்திய தம்பதிகள் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் குழந்தை பெற்றெடுக்க அவசரப்படுகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஒரு நாட்டில் பிறக்கும் குழந்தைக்கு, குழந்தையின் பெற்றோர் எந்த நாட்டவராக இருந்தாலும் பிறப்புரிமையால் அந்த குழந்தைக்கு குடியுரிமை கிடைத்துவிடும். அமெரிக்கா சென்று பணிபுரியும் தம்பதிகள் பலரும் இந்த பிறப்புரிமை குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அங்கேயே பிரசவம் பார்த்து கொள்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் பிப்ரவரி 19ஆம் தேதி வரை பிறக்கும் வெளிநாட்டு தம்பதிகளின் குழந்தைகளுக்கு மட்டுமே பிறப்பால் குடியுரிமை கிடைக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகளில் கருவுற்றிருப்பவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என தீவிரம் காட்டுகிறார்களாம். அமெரிக்கா அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதில் பல்வேறு மாற்றங்களை அவர் அறிவித்தார்.
இதன்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் தாய் அல்லது தந்தை அமெரிக்க குடிமகனாக இருந்தால் மட்டுமே அந்த குழந்தைக்கு குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்தார். பிப்ரவரி 19ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்த இருக்கக்கூடிய இந்திய தம்பதிகளில் கருத்தரித்திருக்கும் பலரும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் அவசர அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழாவது, எட்டாவது மாத காலத்தில் இருக்கும் இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணிகள் பலரும் மருத்துவமனைகளில் தாங்கள் பிப்ரவரி 19ஆம் தேதிக்கு முன்னதாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்களாம். அமெரிக்காவில் செயல்படக்கூடிய பிரசவ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் எஸ்பி ராமா என்பவர் இந்த தகவலை டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வெளியிட்டுள்ளார்.
பல இந்திய தம்பதிகளும் பிப்ரவரி 19ஆம் தேதிக்குள் குழந்தை பெற்று விட வேண்டும் என்பதற்காக தங்களுக்கு முன்கூட்டியே அறுவை சிகிச்சை செய்து குழந்தை எடுத்து விடும்படி கோரிக்கை வைக்கிறார்கள் என கூறியுள்ளார். டெக்சாஸில் உள்ள பிரசவ மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய மருத்துவர் மக்காலா தன்னிடம் 20 முதல் 30 பேர் வரை முன்கூட்டியே அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பதாக கூறுகிறார் .
இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே அறுவை சிகிச்சை மூலம் எடுத்தால் குழந்தைக்கு வருங்காலத்தில் நுரையீரல் பிரச்சனை மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் வரும் என்கிறார். ஆனால் குடியுரிமை வேண்டும் என்பதற்காக பல பெற்றோரும் இதனை கேட்க மாட்டேன் என்கிறார்கள் என அவர் வேதனை தெரிவிக்கிறார்.
Story written by:n Devika