ARTICLE AD BOX
துணை முதல்வர் பவன் கல்யாணின் ஆன்மீகப் பயணம், அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களை கிளப்பியுள்ளது. மோடியுடனான சந்திப்பு, பாஜகவின் தென்னிந்திய வியூகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஜனசேனா கட்சித் தலைவரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக இருக்கிறார். கடந்த ஆண்டு ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் - பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆந்திராவின் 3-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. 2024-ம் ஆண்டுக்கு முன்பு தான் போட்டியிட்ட இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தோல்வியடைந்த பவண் கல்யான் ஒருவழியாக கடந்த ஆண்டு பெற்ற மாபெரும் வெற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
2024 ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் பவன் கல்யாண் மட்டும் இந்த தேர்தலில் வெற்றி பெறவில்லை, ஜனசேனா சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அதாவது 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் ஜனசேனா கட்சி வெற்றி பெற்றுள்ளது.. 2024-ம் ஆண்டு கட்சி தொடங்கிய பவன் கல்யாணுக்கு இந்த வெற்றி கிடைக்க 10 ஆண்டு காலம் தேவைப்பட்டுள்ளது.

தான் துணை முதலமைச்சராக பதவியேற்றதில் இருந்து அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வந்தார் பவன் கல்யாண். தனது தொகுதி மக்களின் நலனுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும் வெளியிட்டு வந்தார்.
இந்த சூழலில் திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் கடுமையாக எதிர்வினையாற்றினார். மேலும் திருப்பதி மலைக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கும் 11 நாட்கள் விரதம் இருந்து பாதையாத்திரையாக சென்று ஏழுமலையானை வழிபட்டார் பவன் கல்யாண்.

அப்போது தான் சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அழிந்து போவார்கள் என்று தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்து தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், உதயநிதியும் அவரின் கருத்துக்கு “ Lets Wait and see" என்று கூலாக பதில் சொல்லி இருந்தார்.
இதனிடையே பவன் கல்யாண், தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளில் சனாதன தர்ம யாத்திரை செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதன்படி, கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பரசுராமர் கோயிலில் பவன் கல்யாண் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியதாக கூறப்பட்டது. தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள சுவாமிமலை கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மேலும் திருப்பரங்குன்றம், திருத்தணி, பழனி ஆகிய முருகன் கோயில்களிலும் சாமி தரிசனம் செய்தார்.

தற்போது பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிவ் பங்கேற்ற அவர், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இந்த நிலையில் இன்று டெல்லி முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பவன் கல்யாண் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்த மோடி, பவண் கல்யாணை பார்த்த உடன் அவருடன் மகிழ்ச்சியாக கலந்துரையாடினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மோடி பேசும் போது பவன் கல்யாண் சிரித்துக் கொண்டே பதில் சொல்வதையும் பார்க்க முடிகிறது. அதே போல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடனும் பிரதமர் மோடி பேசினார்.

பவன் கல்யாணின் ஆன்மீக செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி அவருடன் பேசியது பல யூகங்களை எழுப்பி உள்ளது. அதாவது வட மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு பாஜகவால் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை.
கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியும், கேரளாவில் சிபிஐயும், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியும் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

எனவே தென்னிந்தியா முழுவதுமே கால் பதிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நீண்ட நாள் கனவாக உள்ளது. இதற்காக பவன் கல்யாணை பாஜக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதாவது வடக்கில் எப்படி ஒரு யோகி ஆதித்யநாத் இருக்கிறாரோ, தெற்கின் யோகியாக பவன் கல்யாணை மாற்ற பாஜக முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. பவன் கல்யாணின் சனாதன பேச்சு மற்றும் அவரின் ஆன்மீக நடவடிக்கைகள் அதையே காட்டுகின்றன. தமிழகத்திலும் கேரளாவிலும் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தெற்கில் குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவில் கால் பதிக்க பாஜக தனது உத்திகளை மேலும் தீவிரப்படுத்தலாம். அதன் ஒரு பகுதியாகவே பவன் கல்யாணை பாஜக பயன்படுத்தி வருகிறதாகவும் கூறப்படுகிறது. எனினும் பாஜகவின் இந்த வியூகம் எந்தளவு பலன் கொடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.