ARTICLE AD BOX
அறிவியல் நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனால் எண்ணற்ற அறிவியல் பொருட்கள் மனிதர்களின் கைகளுக்கு விருந்தாக அமைகின்றன. அதில் ஒன்றாக செல்போன் வளர்ச்சியும் இருக்கிறது. இன்றைய காலங்களில் செல்போன்கள் பேசுவதற்காக மட்டுமின்றி விளையாட்டு, பாடல்கள், வீடியோக்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும் அதனை உபயோகப்படுத்தப்படுகிறது.
நொடிப் பொழுதில் மனிதனின் அன்றாட வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்கின்ற மிகப்பெரிய அத்தியாவசிய பொருளாக செல்போன்கள் மாறி வருகின்றன. உள்ளங்கையில் செல்போனை வைத்தப்படி உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் பெறுகிறோம். கணினியின் பாதிச் சேவையையாற்றும் செல்போன்கள், மனிதர்களின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.
அதேநேரத்தில், இந்த செல்போன்களால் ஆபத்தும் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதன் மூலமாகவும், தவறாக பயன்படுத்துவதன் மூலமாகவும் பல்வேறு தீமைகள் விளைகிறது. அந்த வகையில், செல்போனை தினசரி எவ்வளவு நேரத்திற்கு மேல் பயன்படுத்தினால் என்ன ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஜாமா நெட்வொர்க் நிறுவனம் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லட் என டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. ’ஒருநாளில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட்போனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சில ஆண்டுகளில் கிட்டப்பார்வை குறைபாடு ஏற்படும்’ என எச்சரித்துள்ளது. மேலும் அதற்கு மேலான நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் அது மூளை பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது என அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.