ARTICLE AD BOX
RBI new rules on Gold loan: நகைக்கடன் மறுஈடு வைப்பதில் ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் சாமானிய மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. அசல் தொகையைச் செலுத்த முடியாதவர்கள் நகையை மீட்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் கந்துவட்டிக்காரர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

பொதுமக்கள் அவசர கால நிதித் தேவை ஏற்படும்போது வங்கி சேவையை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். வீடு, வாகனம், கல்வி முதலியவற்றுக்கு கடனுதவியும் வங்கிகள் மூலம் கிடைக்கிறது. கடன் பெறுவதற்காக நகைகளை அடமானம் வைக்கும் வழக்கம் பரவலாகக் காணப்படுகிறது. நகைகளை அடகு வைக்கும்போது கடன் எளிதாகக் கிடைப்பது ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

நடைக்கடன் பெறுபவர்களுக்கு அடகு வைக்கும் நகையின் மதிப்பில் 85% வரை கடன் வழங்கப்படுகிறது. நகைக்கடன் பெறுபவர்கள் ஓராண்டு காலத்திற்குள் வட்டியுடன் அசலையும் செலுத்தி நகையைத் திருப்பிக்கொள்ள முடியும். ஆனால், ஆனால், ஏழை எளிய மக்களில் பலர் ஓராண்டுக்குள் அடகு வைத்த நகையைத் திருப்ப முடியாதபடி நெருக்கடியைச் சந்திக்கின்றனர். இதனால், வாங்கிய கடனுக்கான வட்டியை மட்டும் தொடர்ந்து வங்கியில் செலுத்துகிறார்கள்.

அசல் தொகையையும் செலுத்தாத காரணத்தால், அதற்கு ஈடாக வங்கி நிர்வாகம் அதே நகையை மறுஈடாக தக்கவைத்துக்கொள்கிறது. இத்துடன் மதிப்பீட்டாளர் கட்டணம், பரிவர்த்தனை கட்டணம் ஆகிய கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. வட்டியுடன் அசல் தொகையையும் சேர்த்து முழுமையாகச் செலுத்திய பிறகு அடகு வைத்த நகை வாடிக்கையாளரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும்.

ஆனால், தற்போது, நகைக்கடனில் மறுஈடு வைப்பதற்கு ரிசர்வ் வங்கி புது கட்டுப்பாட்டுகள் விதித்துள்ளது. இதனால், நகைக்கடன் பெற்ற சாமானிய மக்களுக்கு பிரச்சினையாக மாறியுள்ளது. ஓராண்டு முடிவில் நகையை மீட்பதற்குப் பதிலாக, மறுஈடு வைக்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் வட்டியை மட்டும் செலுத்தினால் போதாது. முழு அசல் தொகையையும் சேர்த்தே செலுத்த வேண்டும் என புதிய விதிமுறை கூறுகிறது.

பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்தும் இந்த விதியை அமல்படுத்த ஆரம்பித்துவிட்டன. இதனால், நகையை மறுஈடு வைக்க விரும்பும் வாடிக்கையாளர்களிடம் அசல் தொகையையும் சேர்த்து செலுத்துமாறு வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் வேறு வழியில்லாமல் இன்னொரு இடத்தில் கடன் வாங்கி அசல் தொகையை வங்கிக்குக் கட்டுகிறார்கள். அசல் தொகையைச் செலுத்த முடியாத மக்கள் அடகு வைத்த நகையை மீட்க வழி தெரியாமல் பரிதவிக்கின்றனர்.

வங்கியில் நிலவும் இந்த கெடுபிடியால் கந்துவட்டிகாரர்களுக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. பலரும் கந்துவட்டிக்காரர்களிடம் பணத்தை வாங்கி நகையை மறுஈடு வைக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கூடுதல் வட்டிச்சுமை ஏற்படுகிறது. அடுத்தடுத்து வரும் புதிய சிக்கல்களில் மாட்டிக்கொண்டு திண்டாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடு காரணமாக வங்கிகளுக்கும் எந்த லாபமும் ஏற்படப் போவதில்லை. தொழில்நுட்ப ரீதியாக ஜி.எஸ்.டி. வருமான வரி கணக்கில் வரும் என்று மட்டும் கூறப்படுகிறது. இதனால் சாமானிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. மாறாக, புதிய பிரச்சினைகள்தான் முளைக்கின்றன. இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் மட்டுமே பயன் அடையப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் மத்திய அரசு இந்த விஷயத்தில் ரொக்கமாக பணத்தை எடுத்துவரச் சொல்வதும் மற்றொரு சிக்கலாக உள்ளது என வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர். மக்களின் சிரமங்களை உணர்ந்து ரிசர்வ் வங்கியின் விதிகளை மீண்டும் பழையபடி மாற்றியமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.