ARTICLE AD BOX
ட்ராகன்(3 / 5)
டி.ராகவன் (பிரதீப் ரங்கநாதன்) +2வில் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்த பையன். அம்பியை நந்தினி ரிஜெக்ட் செய்வது போல் ராகவன் வாழ்விலும் ஒரு சம்பவம் நிகழ, “இ.. லோகத்துல நல்லவாளுக்கு மரியாதையே இல்ல” என புலம்பும் டி.ராகவன் மோசமான, அடாவடியான, அடங்காத டிராகனாய் மாறிக் கல்லூரியில் சேர்கிறார்.
கீர்த்தியுடன் (அனுபமா பரமேஷ்வரன்) காதல், கேங் சேர்த்துக் கொண்டு அடிதடிகள், ஆசிரியர்களை கலாய்த்தல் என வொர்ஸ்ட் ஸ்டூடெண்ட்டாக பேர் எடுக்கும் டிராகன், ஒரு கட்டத்தில் படிப்பெல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என சொல்லி கடைசி செமஸ்டரில் 48 அரியர்களுடன் கல்லூரியிலிருந்து வெளியேறுகிறார். இரண்டு வருடங்களுக்கு பின்பும் பொறுப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் டிராகனுடன், கீர்த்திக்கு மனக்கசப்பு நேர, காதலில் ப்ரேக் அப். ஃபெயிலியர் என சொன்ன நபர்கள் முன் சக்சஸ்ஃபுல் ஆக மாறுவது என முடிவெடுக்கும் டிராகன் என்ன செய்கிறார்? அதன் விளைவுகள் என்ன? இறுதியில் அவர் எடுக்கும் முடிவு என்ன என்பதே கதை.
ஒவ்வொரு காட்சியிலும் படத்தை என்கேஜிங்காக நகர்த்த வேண்டும் என்ற முடிவுடன் எழுதப்பட்டிருக்கும் கதை, திரைக்கதை முதல் ப்ளஸ். படம் துவங்கி கொஞ்சம் டேக் ஆஃப் ஆக நேரம் எடுத்துக் கொண்டாலும், பள்ளியில் மனம் மாறும் ஹீரோ, கல்லூரியில் அடாவடியாக இருக்கிறார், லவ் ஃபெயிலியர், குறுக்கு வழியில் செய்யும் விஷயம், அதன் விளைவாக ஏற்படும் பிரச்சனை என பட படவென நகர்கிறது.
ஹீரோ பிரதீப் ரங்கநாதன், கல்லூரி படிப்பில் நாட்டமின்றி, கெத்தாக ஐடி கார்டை தூக்கி எறிந்து செல்வது, பின்பு அதே கல்லூரியில் நுழைவது, காதலியிடம் ஆத்திரத்தில் கத்துவது, பின்பு அவளை புரிந்து கொள்வது என இருவேறு மனநிலைகளை பிரதிபலிக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆக்ஷன், டான்ஸ், ரொமான்ஸ், மாஸ், எமோஷனலான காட்சிகள் என அத்தனையிலும் பாஸ் மார்க். பிரதீப்புக்குப் பிறகு கெத்து காட்டுவது பிரின்ஸ்பல் மயில்வாகனன் கதாப்பாத்திரத்தில் வரும் மிஷ்கின். குறிப்பாக இடைவேளையின் போதும், அதன் பிறகு வரும் கல்லூரி காட்சிகளிலும் மாஸ் காட்டுகிறார். அவரின் நடிப்பு ஹ்யூமர் + எமோஷனை மிகச்சரியாக படத்தில் சேர்க்கிறது. அனுபமா பரமேஷ்வரன், கயாட்டு லோகர் இருவரும் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விஜே சித்து, குட்டி ட்ராகனாக வரும் அர்ஷத் படத்தின் காமெடி போர்ஷனுக்கு கேரண்டி. கௌதம் மேனன், கே எஸ் ரவிக்குமார், ஜார்ஜ் மரியம் சில காட்சிகளே வந்தாலும் அழுத்தம் சேர்க்கிறார்கள்.
கல்லூரியில் படிக்காமல் சுற்றும் ஹீரோவை ஸ்லோ மோஷனில் மாஸாக காட்டிய சினிமாக்களுக்கு மத்தியில், படிக்காமல் போனால், அந்த ஹீரோ கல்லூரியைத் தாண்டி ஸீரோ தான் என்பதை சொல்கிறது இந்த சினிமா. தான் படிக்கும்போது செய்த தவறுகளை, இன்னொருவர் பின்பற்றுவதைப் பார்த்து ஹீரோ உணரும் விஷயங்கள், ப்ரேக் அப் செய்த காதலியின் தரப்பு நியாயங்களை புரிந்து, அவளிடம் மன்னிப்பு கேட்பது, குறுக்கு வழியில் சென்று வெல்ல நினைப்பது தவறு என புரிந்து கொள்ளும் இடம் என இன்றைய இளைஞர்களுக்கு எண்டர்டெயினிங்காக நீதிக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள் கதாசிரியர்கள் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன். முதல் பாதி கதாப்பாத்திரங்களை பின்னால் கொண்டு வரும் இடங்களும், முன்பு நடந்தவைகளுக்கான முடிவையும் திரைக்கதையில் கொண்டு வந்திருந்த விதமும் செம ஸ்மார்ட்.
கலர்ஃபுல் யூத் சினிமாவுக்கு, எனர்ஜி ஏற்றுகிறது நிகேத் பொம்மியின் கேமராவும், லியோன் ஜேம்ஸின் இசையும். ட்ராகன் தீம், வழித்துணையே எல்லாம் ஹம்மிங் செய்யத் தூண்டும் ரகம்.
படத்தின் வசதிக்காக கன்வீனியன்ட்டாக எழுதப்பட்டிருக்கும் சில விஷயங்கள் சற்று உறுத்துகிறது. ஹீரோ செய்யும் ஃபோர்ஜரி, ஹீரோ உண்மையை சொல்ல ஒரு சீனை உருவாக்கியது, க்ளைமாக்ஸில் வரக் கூடிய ஒரு எமோஷனல் தருணம் இவை எல்லாம் இன்னும் சற்று சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம். மேலும் அனுபமா நடித்துள்ள கீர்த்தி கதாப்பாத்திரத்தின் குற்ற உணர்வு எதைப் பற்றியது என இன்னும் தெளிவாக எழுதியிருக்கலாம். ஒரு ஊதாரி காதலை விட்டுச் சென்று வேறொருவரை திருமணம் செய்தது பெரும் குற்றம் போல் அவர் பேசுவது அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. இது போன்ற மைனர் விஷயங்களை சரி செய்திருக்கலாம்.
ஆனால் ஒரு சினிமாவாக, எந்த இடத்திலும் பெரிதாக தொய்வடையாமல், சரசரவென நகரும் ஒரு சிறப்பான எண்டர்டெய்ன்மெண்ட் படம் என்ற இடத்தைப் பிடித்திருக்கிறது `டிராகன்’.