ARTICLE AD BOX
திருப்போரூர்: திருப்போரூரில் சார்பதிவாளர் அலுவலகத்தை அனைத்துக் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் தெற்கு மாடவீதியில் கடந்த 1886ம் ஆண்டு முதல் சார்பதிவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த, திருப்போரூர் சார்பதிவகத்தை திருப்போரூர், கேளம்பாக்கம், நாவலூர், வண்டலூர் ஆகிய நான்கு அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு, உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகங்களில் இடம் பெறும் கிராமங்கள் குறித்து பதிவுத்துறை வட்டாரங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், திருப்போரூரைத் தாண்டி உள்ள ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், ஆமூர், அதிகமநல்லூர் ஆகிய கிராமங்கள் திருப்போரூர் சார்பதிவகத்தில் சேர்க்கப்படாமல் கேளம்பாக்கம் சார்பதிவகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
அதேபோன்று, கேளம்பாக்கத்தை ஒட்டி உள்ள படூர், புதுப்பாக்கம், சாத்தங்குப்பம் கிராமங்கள் நாவலூர் சார்பதிவகத்திலும், வெளிச்சை, கொளத்தூர் கிராமங்கள் திருப்போரூர் சார்பதிவகத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சிகளின் சார்பில், திருப்போரூர் சார்பதிவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென நேற்று காலை ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் குமரவேல், நந்தகுமார், பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர்கள் என்.எஸ்.ஏகாம்பரம், பி.வி.கே.வாசு, மாவட்ட துணை செயலாளர் தட்சிணாமூர்த்தி, தே.மு.தி.க. ஒன்றிய நிர்வாகி டில்லி பாஸ்கர், மா.கம்யூ ஒன்றிய செயலாளர் செல்வம், இந்திய கம்யூ மாவட்ட துணைத்தலைவர் ஜெகதீசன், அம்பேத்கர் ஜனசக்தி மாநில தலைவர் விஸ்வநாதன், புதிய புரட்சிக் கழக மாநில செயலாளர் லோகு,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வேதா அருள், தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர் கவுதம், புரட்சி பாரதம் நிர்வாகிகள் ராஜேஷ், அலெக்சாண்டர் மற்றும் பல்வேறு கட்சியினர் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, அனைத்துக் கட்சியினரிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அனைத்துக் கட்சியினரும் சார்பதிவாளரை சந்தித்து மனு அளிப்பதாக தெரிவித்தனர். இதற்கு, போலீசார் அனுமதி வழங்கினர்.
இதைத்தொடர்ந்து, அனைத்துக் கட்சியினரும் சென்று சார்பதிவாளர் ரமேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஒவ்வொரு சார்பதிவகத்திலும் எந்தெந்த கிராமங்களை சேர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அரசின் முடிவை செயல்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு மாவட்டங்களில் உள்ளது போன்ற ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலக வளாகத்தை உருவாக்க வேண்டும் என்றும் அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருந்தது.
The post திருப்போரூரில் சார்பதிவாளர் அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகை appeared first on Dinakaran.