போடி அருகே வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ

2 hours ago
ARTICLE AD BOX

*மரங்கள் நாசம்; வனவிலங்குகளும் உயிரிழப்பு

போடி : போடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மீண்டும் ஏற்பட்ட காட்டுத் தீயில் மரங்கள் எரிந்து நாசமாகின. அங்கிருந்த வன விலங்குகள் தப்பி ஓட்டம் பிடித்தன.

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைக்காலங்களில் பெரியகுளம் பகுதியில் அடுக்கம்-கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் போடிமெட்டு மலைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் திடீர் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். அதுபோல், கோடைக்காலங்களில் மூணாறு, போடி குரங்கணி போன்ற மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவுவதும் தொடர்கதையாக உள்ளது.

போடி குரங்கணி மலைப்பகுதியான பிச்சாங்கரை வனப்பகுதியில் மான், காட்டுமாடு, முயல், போன்றவன விலங்குகள் உள்ளன. மேலும் அரியவகை மரங்களான, தேக்கு, குமில், சலவாகை போன்ற மரங்களும் உள்ளன. இந்த வனப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முன் காட்டுத்தீ பரவி தொடர்ந்து எரிந்தது. இதில் விலை உயர்ந்த தேக்கு, சந்தனம், மருது, கருங்காலி, செங்கருங்காலி உள்ளிட்ட மரங்கள் எரிந்து நாசமாகின.

மேலும், இப்பகுதியில் இருந்த வனவிலங்குகள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இப்பகுதியில் பரவி வரும் காட்டு தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர். தற்போது வெயில் காலம் தொடங்கிய நிலையில் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ பரவும். பகல் மற்றும் இரவு நேரங்களில். எரியும், காட்டுத்தீயினால். அடிவாரப் பகுதிகளில். விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

இதனால் வனத்துறையினர் இப்பகுதிகளை கண்காணித்து. விட்டு விட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலம் துவங்கவுள்ளதால், இப்பகுதியில் ஏற்படும் காட்டுத்தீயை அணைக்க தேவையான உபகரணங்களை வனத்துறையினருக்கு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் போடி அருகே சிலமலை, ராசிங்காபுரம், சங்கராபுரம் இடையே ஒண்டிவீரப்ப சாமி கோயில் மலை அடிவாரம், மல்லிகர் சாமி கரடு, பொன்குன்றம் வரையிலான மலைப்பகுதியில் கடந்த வாரம் காட்டுத்தீ ஏற்பட்டு தணிந்தது.

சில நாட்கள் இடைவெளியில் மீண்டும் கடந்த 2 நாட்களுக்கு இரவு முதல் காட்டுத் தீ ஏற்பட்டு மரங்கள், தாவரங்கள் எரிந்து வருகின்றன. இதனால் அடர் வனப் பகுதியில் வருடக் கணக்கில் வளர்ந்துள்ள அரிய வகை மரங்கள், மூலிகை தாவரங்கள் நாசமாகி வருகின்றன.

மேலும் அங்கு வசித்து வரும் பறவைகள், மலைப்பாம்புகள் உள்ளிட்ட ஊர்வன வகைகள் தீயில் கருகி உயிரிழந்து வருகின்றனர். பல வன விலங்குகள் தப்பி வேறுபகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. காட்டுத் தீ ஏற்பட்டால் உடனடியாக தணிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு இடங்களில் பீட்டுகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.

The post போடி அருகே வனப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ appeared first on Dinakaran.

Read Entire Article