சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள்!

2 hours ago
ARTICLE AD BOX

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025-26 ஆம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று தாக்கல் செய்தார்.

நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள பூங்காக்களில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் 70 பூங்காக்களில் மக்கள் பயன்பெறும் வகையில், பூங்காவின் ஒரு பகுதியில் கூரை அமைத்து இருக்கை வசதியுடன் கூடிய புத்தகம் வாசிப்பு மண்டலங்கள் (Reading zone) அமைக்கப்படும். இதற்காக ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சாலை மைய தடுப்புகள், சாலை மைய தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரித்தல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள சாலை மைய தடுப்புகள் மற்றும் சாலை மைய தீவுத் திட்டுகளை அழகுபடுத்த, முதற்கட்டமாக 25 கிலோ மீட்டர் நீளத்திற்கு மண் மற்றும் உரம் இடுதல் மற்றும் பல்வேறு வகையான அலங்காரப் பூச்செடிகள் நடவு செய்து அதனைப் பாதுகாக்கும் வகையில் துருப்பிடிக்காத இரும்பிலான கைப்பிடி (Stainless Steel Hand Rail) அமைக்கப்படும். இதற்காக ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதையும் படிக்க | விரைவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்கள்! - அமைச்சர் சக்கரபாணி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள 300 பூங்காக்களை மக்கள் அதிகம் பயன்படுத்திடும் வகையில், பூங்காக்கள் பழுது பார்க்கும் பணிகளும் மற்றும் மேம்படுத்தும் பணிகளும் செய்யப்படும். இதற்காக ரூ. 43 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 10 பெரிய பூங்காக்களைத் தேர்வு செய்து அனைத்து வகையான பார்வையாளர்களும், முக்கியமாக பெற்றோருடன் வரும் சிறப்பு குழந்தைகள் உபயோகிக்கும் வகையிலான உபகரணங்கள் உள்ளடக்கிய சிறப்பு அம்சங்கள் கொண்ட பூங்காக்களாக மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரயில்வே தேர்வு! தேர்வர்கள் அதிர்ச்சி!!

Read Entire Article