ARTICLE AD BOX
புதுடெல்லி,
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக சட்டமன்ற மரபின்படி, கவர்னர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், நிகழ்வின் இறுதியில் தேசியகீதம் பாடுவதும் நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த நடைமுறை மரபை மாற்றி, தொடக்கத்திலேயே தேசிய கீதம் பாடவேண்டும் என வலியுறுத்தி, அது ஏற்கப்படாத நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.
கவர்னரின் இந்த நடவடிக்கை தமிழக சட்டமன்றத்தையும், அரசமைப்பு சட்டத்தையும் அவமதிக்கும் செயல் என பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்த நிலையில், அரசியல் சாசனத்துக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், அவரைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டு, வழக்கறிஞர் ஜெய சுகின் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது சுப்ரீம்கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் ஏற்கெனவே இதுதொடர்பான வழக்குகள் விசாரணையில் உள்ளதை சுட்டிக்காட்டி இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.