ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முரண்பாடுகள் உள்ளதாகவும், அதனை ஏற்கக் கூடாது எனவும் புகார் தரரான கனகராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
அதேபோல், சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், "இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிந்த நிலையில், இன்று வன்கொடுமை தடுப்பு நீதிமன்ற நீதிபதி வசந்தி உத்தரவை பிறப்பித்தார்.
வேங்கை வயல் விவகாரம்: `வன்கொடுமை வழக்கல்ல...' - சிபிசிஐடி மனுவை ஏற்ற நீதிமன்றம் பரபரப்பு உத்தரவுஅதில், ’சி.பி.சி.ஐ.டி போலீஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்று இந்த வழக்கை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், புகார் கொடுத்த தரப்பு வழக்கறிஞர்கள் செய்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த மனுவை ஏற்பதற்கு போதிய முகாந்திரம் உள்ளதாக கருதி, சி.பி.சி.ஐ.டி போலீஸான் குற்றப்பத்திரிகையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் தரப்புக் கேட்ட குற்றப்பத்திரிகை நகலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி உள்ளார். வேங்கை வயலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த வழக்கின் விசாரணை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.