ரஷ்யாவுடனான போரை நிறுத்த உக்ரைனுக்கு புதிய நிபந்தனை.. திடீர் முட்டுக்கட்டை போடும் டிரம்ப்!

3 hours ago
ARTICLE AD BOX
Published on: 
03 Feb 2025, 1:45 pm

செய்தியாளர் - ஜி.எஸ்.பாலமுருகன்

சீனா, கனடா, மெக்சிகோ நாடுகள் மீது அதிரடியாக கூடுதல் வரியை விதித்து வர்த்தகப் போரை தொடங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்போது ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு திடீரென முட்டுக்கட்டை போட்டுள்ளார். இது சர்வதேச அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கிய நேட்டோ எனப்படும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உறுப்பினராக உக்ரைன் முனைப்பு காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த போரினால் உக்ரைனில் உள்ள பெரும்பாலான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

உக்ரைனின் ஐந்தில் ஒரு பங்கு இப்போது ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் பெரிய நகரங்களில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் போரை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன்.

இந்நிலையில் போரை விரைவில் நிறுத்தவுள்ளதாகவும் இதுதொடர்பான பேச்சுவார்த்தையை ரஷ்யாவிடம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உக்ரைனை தவிர்த்து அமெரிக்காவும் ரஷ்யாவும் ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் தொடர்பாக முதலில் உக்ரைனும் அமெரிக்காவும் பலகட்ட விவாதங்கள் நடத்துவதே சரியாக இருக்கும் என்றும், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் கருத்துக்கும் செவிசாய்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்முகநூல்

நேட்டோ அமைப்பில் உக்ரைன் உறுப்பினராவதே ரஷியாவுடனான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்றும் இது நிறைவேறினால் புவி அரசியலில் வலுவான நபராக டிரம்ப் உருவெடுப்பார் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஜெலன்ஸ்கியின் எதிர்ப்பு குரல் எழுந்திருக்கும் நிலையில், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் எட்டப்பட்டால், உக்ரைனில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று டிரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது. இதனை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கான டிரம்பின் சிறப்பு தூதர் கீத் கெல்லாக் தெரிவித்தாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டிரம்பின் அழுத்தம் காரணமாக போர் நிறுத்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, உக்ரைன் - ரஷ்யா போரை ஒரே நாளில் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று டிரம்ப் அடிக்கடி கூறி வந்தார்.

ஆனால் அதிபரான பிறகு போரை நிறுத்துவதில் இருந்து அவர் மாறுபட்டிருப்பதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Read Entire Article