ARTICLE AD BOX
Budget 2025 Income tax relief on second house: 2025-26 பட்ஜெட்டில், இரண்டாவது வீடு வைத்திருப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சொந்த பயன்பாட்டிற்கான இரண்டாவது வீட்டிற்கு பொருந்தும். இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட் துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் சொத்து உரிமையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வழங்கியுள்ளது. இனி இரண்டு வீடு அல்லது சொத்து வைத்திருப்பவர்கள் வரி விலக்கு பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சொந்த பயன்பாட்டுக்கான இரண்டாவது வீடு அல்லது சொத்து வைத்திருப்பவர்கள் அதற்கான வரியைச் செலுத்தத் தேவையில்லை. இந்தச் சீர்திருத்தம் இரண்டாவது வீடு வைத்திருப்பவர்களுக்கு அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இந்த நடவடிக்கை ரியல் எஸ்டேட்டில் முதலீட்டை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை இரண்டாவது வீட்டிற்கான வாடகை வருமானத்தின் மீதான வரிவிதிப்புச் சுமையை நீக்குகிறது. இது வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும். ரியல் எஸ்டேட் துறையில் குடியிருப்புச் சந்தை முதலீடு அதிகரிக்க வழிவகுக்கும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, வரி செலுத்துவோர் இரண்டாவது சொத்தில் வாடகை மூலம் வாடகை ஈட்டவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக வேலை அல்லது வணிக காரணங்களைக் காட்டுவது வழக்கம். பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு இந்தத் தேவையை நீக்கி, வரி விலக்கு பெறுவதை சுலபமாக்குகிறது.
இந்தத் திருத்தம், வருமான வரிச் சட்டத்தின் 23(2) பிரிவின் கீழ் உள்ள விதிகளுடன் ஒத்துப்போகிறது. இரண்டு வீடு வைத்திருப்பவர்கள் இரண்டாவது வீட்டில் வசிக்காவிட்டாலும்கூட கணிசமாக நன்மையைப் பெற முடியும். வேலையின் காரணமாக வீடு மாறவேண்டிய தேவை உள்ளவர்களுக்கு இது ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும்.
மேலும், இந்த சீர்திருத்தம் விடுமுறை கால இல்லங்கள் அல்லது இரண்டாம் நிலை குடியிருப்புகள் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும். இனி வரி செலுத்துவோர் தங்கள் விடுமுறை இல்லங்களை அபராதம் இல்லாமல் அனுபவிக்க முடியும்.
நீண்டகாலமாக விவாதிக்கப்பட்ட வாடகை வருமானத்தின் மீதான வரிச்சுமை குறித்த பிரச்சினைக்கு இந்த பட்ஜெட் ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடாத வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்த மாற்றம், 2ஆம் நிலை, 3ஆம் நிலை நகரங்களில் வீடுகள் வாங்கும் ஆர்வத்தைத் தூண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.