ARTICLE AD BOX
விரத மகிமை: முற்பிறவியில் நாரதர் யார் தெரியுமா! மத் பாகவதம், சாதுர்மாஸ்ய விரத மகிமையைப் பற்றி விவரிக்கிறது. ஒரு முறை சந்நியாசிகள் கூடி, சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் பணிவிடை செய்ய சிறுவன் ஒருவன் நியமிக்கப்பட்டான்.
அவனுக்குத் தந்தை இல்லை; தாயார் மட்டுமே. சந்நியாசிகளுக்குப் பணிவிடை செய்வதில் மிகவும் ஊக்கமாக இருந்தான் அந்தச் சிறுவன்.
அவனிடம், சந்நியாசிகள் மிகுந்த கருணையோடு இருந்தனர். தாங்கள் உணவை அவனுக்குக் கொடுத்தனர். சிறுவன் மகிழ்ச்சியோடு அதைச் சாப்பிட்டான். சாதுர்மாஸ்ய விரதம் இருந்த சந்நியாசிகளது உணவால், சிறுவனுக்குத் தெளிவு பிறந்தது. சந்நியாசிகளின் விரதத்துக்கு தொந்தரவு ஏற்படாமல் அந்த சிறுவன் பார்த்துக் கொண்டான். அவர்கள் தேவை அறிந்து உதவினான்.
சந்நியாசிகள் அவ்வப்போது சொல்லும் பாகவதக் கதைகள் மற்றும் ஸ்தோத்திரங்களில் மனதைச் செலுத்தி பகவத் பக்தியில் சிறந்தவன் ஆனான். சிறுவனின் பணிவிடை மற்றும் அடக்கத்தால் உள்ளம் குளிர்ந்த சந்நியாசிகள், அவனுக்குத் தத்துவ ஞானம் உபதேசித்தனர். அதனால் சிறுவனுக்குப் பக்தியும் ஞானமும் அதிகரித்தன.
விரத காலம் முடிந்ததும், சந்நியாசிகள் அங்கிருந்து கிளம்பினர். மீண்டும் சிறுவன் தன் தாயாருடன் வசித்தான். ஒரு நாள் இரவு நேரத்தில் பால் கறக்கப் பசுவை நாடிப் போனாள் தாய். அப்போது, அவளை அறியாமல் ஒரு பாம்பை மிதித்து விட்டாள்; பாம்பு கடித்து அவள் இறந்தாள். இருந்த ஒரே ஒரு பந்தமும் மறைந்ததும் சிறுவன் வடதிசை நோக்கிக் கிளம்பினான்.
காட்டில் நீண்ட காலம் தவம் செய்து, இறைவன் அருள் பெற் றான். அந்தச் சிறுவன்தான் மறுபிறவியில், ‘நாரதர்’ எனும் திருநாமம் பெற்றான். நாரதரின் முற்பிறவிக் கதை இது. இந்தக் கதையை நாரதரே விவரித்திருக்கிறார்.
பிரம்மன் படைத்த ஒன்பது புதல்வர்களில் நாரதர் சிறந்து விளங்கக் காரணம் முற்பிறவியில் விரதம் இருந்தது மட்டுமல்ல, விரதத்துக்கு உதவியதும்தான் என்கிறது புராணம்.